மரக்காணம்: புதுச்சேரி-தமிழக எல்லையில் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 4) நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் ஸ்கூட்டரில் சென்ற தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.
நாட்டு வெடிகள் தயாரித்து, விற்பனை செய்து வந்தார் திரு கலைநேசன், 34. எட்டு வயது மகன் பிரதீஷுடன் நேற்றுக் காலை வீராம்பட்டிணத்தில் இருந்து ஸ்கூட்டரில் நாட்டு வெடிகளை எடுத்துக்கொண்டு, மரக்காணம் அடுத்த கூனிமேட்டிற்குச் சென்றார் திரு கலைநேசன்.
அங்கு நாட்டு வெடிகளை விற்றபின், மீதியுள்ள நாட்டு வெடி மூட்டைகளுடன் புதுச்சேரிக்கு இருவரும் திரும்பிக்கொண்டிருந்தனர்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் சின்னக் கோட்டக்குப்பம் அருகே பிற்பகல் 1.40 மணியளவில் அவர்கள் வந்துகொண்டிருந்தபோது, ஸ்கூட்டரில் வேறொருவர் சாலையைக் குறுக்கே கடக்க முற்பட்டார்.
இதைக் கண்டதும் திடீரென ‘பிரேக்’ பிடித்த திரு கலைநேசன், ஸ்கூட்டருடன் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது, உராய்வு ஏற்பட்டு ஸ்கூட்டரில் இருந்த நாட்டு வெடிகள் பலத்த சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில், தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் நாட்டு வெடிகள் தயாரிக்கவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதுச்சேரியில் நாட்டு வெடிகளைத் தயாரித்து, சிலர் தமிழகத்தில் திருட்டுத்தனமாக விற்பனை செய்கின்றனர்.
சோதனைச்சாவடி அமைத்து, புதுச்சேரி-தமிழக எல்லைப் பகுதியில் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்திருந்தால் இப்படி ஒரு விபத்து நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.