செங்கல்பட்டு: நரிக்குறவர், இருளர், பழங்குடி இன மக்களுக்கு ரூ.4.5 கோடி செலவிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களது நீண்டகால கனவை நிறைவேற்றி வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரி அருகே வசிக்கும் இவர்கள், நீண்ட நாட்களாக தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவேண்டும் என்று போராடி வந்தனர்.
இந்நிலையில், நரிக்குறவர், இருளர் சமூகத்தைச் சேர்ந்த 282 பேருக்கும் 81 பழங்குடியின குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதிச் சான்றிதழை முதல்வர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, நரிக்குறவர் இனப் பெண்களான அஸ்வினி, பவானி ஆகியோர், முதல்வருக்கு நன்றி கூறி, தங்களது வீட்டுக்கு வரவேண்டும் எனக் கோரினர்.
இதையடுத்து, அவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார் முதல்வர்.
பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் இன மக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம், சாலை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகவும் உறுதி அளித்தார்.
இதுகுறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், “சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு,” என்று கூறியுள்ளார்.