திருவண்ணாமலை: கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவி, வெற்று வாக்குறுதிகளை அளிக்காமல், உடனடியாக பூமியைக் காப்பாற்றும் நடவடிக்கையில் இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு நேரடியாக கோரிக்கை விடுத்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அண்மையில் நடந்த ஐ.நா.வின் 26வது பருவநிலை மாநாட்டில் வினிஷா உமாசங்கர் உரையாற்றிய போது, "இதுநாள் வரை உலகத் தலைவர்கள் அளித்து வந்த வெற்று வாக்குறுதிகள் எங்கள் தலைமுறையை விரக்தி அடையச் செய்துள்ளன.
"நாங்கள் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறோம். ஆனால், உங்கள் மீது கோபப்பட எனக்கு நேரமில்லை. நான் செயலில் இறங்க விரும்புகிறேன்.
"நான் இந்தியச் சிறுமி மட்டுமல்ல, இந்த பூமியின் சிறுமி. அதில் பெருமை அடைகிறேன். அதோடு நான் ஒரு மாணவி, கண்டுபிடிப்பாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர்," என்று பேசியதைக் கண்டு உலகத் தலைவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் வினிஷா சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி வண்டியை வடிவமைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா உமாசங்கர், 14. இவர் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியை வடிவமைத்ததற்காக சுற்றுச்சூழலுக்கான ஆஸ்கார் என்றழைக்கப்படும் 'எர்த்ஷாட்' விருதுக்குத் தேர்வானவர்.