சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள், உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகளில் அடங்குவர்.
அமெரிக்காவின் ஸ்டாம்ஃபர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் பட்டியலில் இது தெரியவந்துள்ளது.
அப்பட்டியலில் இடம்பிடித்துள்ள 186,177 விஞ்ஞானிகளில் 2,042 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 100க்கும் மேற்பட்ட வர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
வேதியியல், இயந்திரப் பொறியியல், தானியக்கம், சுற்றுச்சூழல் பொறியியல், புவியியல் உள்ளிட்ட துறைகளில் அந்த விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர்.
ஐஐடி மெட்ராஸ் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சரித் கே. தாஸ், இயந்திரப் பொறியியல் துறையில் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உட்பட பேராசிரியர்கள் மூவரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
"உலகின் சிறந்த 2% விஞ்ஞானி களின் அண்மைய பட்டியலில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளையும் சேர்ந்த 150 பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் நானும் இடம்பிடித்துள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்," என்று பேராசிரியர் வேல்ராஜ் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
மாநிலப் பல்கலைக்கழகங்களில் பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தலா ஒன்பது பேரும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் நால்வரும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் மூவரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தலா இருவரும் என இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.