சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மழை, வெள்ளத்தால் அவதிப்பட்டு வரும் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது. அண்டை மாநிலங்களிலும் மழை பெய்து வருவதால், கோயம்பேடு சந்தைக்கு வர வேண்டிய காய்கறிகள் உரிய நேரத்தில் வரவில்லை. காய்கறி வரத்து குறைந்ததால் தக்காளி, உருளை உட்பட பெரும்பாலான காய்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்தது.
60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இப்போது ரூ.110க்கு விற்கப்படுகிறது. தக்காளி மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது. முருங்கைக்காய், கத்தரிக்காய், கேரட், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே வாடிக்கையாளர்கள் வருகை அறவே இல்லாததால், கோயம்பேட்டில் உள்ள பூ வியாபாரிகள் கடும் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர். அங்கு தினந்தோறும் விற்பனையாகாத ஏராளமான பூக்கள் சாலையில் கொட்டப்படுகின்றன.