சென்னை: கனமழை, வெள்ளப் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் வெகுவாகப் போராடி முதியவர்களையும் குழந்தைகளையும் மீட்டு வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் காவல்துறை சார்பில் 13 பேரிடர் மீட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுவில் உள்ளவர்களுக்கு நன்கு நீச்சல் தெரியும் என்பதுடன் ஏற்கெனவே மீட்புப் பணிகளில் ஈடுட்ட அனுபவமும் உள்ளவர்கள்.
நேற்று முன்தினம் சூளைமேடு பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையையும் 80 வயது முதியவரையும் இவர்கள் மீட்டனர். மேலும் தி.நகர் பகுதியில் வயதான தம்பதியரையும் மீட்டுள்ளனர்.
கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரட்டோடுகிறது.
காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
இதற்கிடையே அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.