சென்னை: இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய வ.உ.சிதம்பரனாரின் 85ஆவது நினைவு நாள் இன்று தியாகத் திருநாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதோடு மட்டுமின்றி, தனது சொத்து சுகங்களையும் சொந்த பந்தங்களையும் இழந்து அந்நியரால் இரட்டை ஆயுள் தண்டனையையும் அனுபவித்து, சிறையிலே செக்கிழுத்த தியாகச் செம்மலின் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பல் கட்டுமானம் தொடர்பான தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய துறைகளில் சிறந்த முறையில் பங்காற்றும் தமிழருக்கு கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி. விருதுடன் கூடிய ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.
சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் கண்டு பயன்பெறும் வகையில் பேருந்து, புகைப்படக் கண்காட்சி அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட வ.உ.சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
அந்த அறிவிப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.