சென்னை: யார் ஒருவர் கொடுக்கும் அடியையும் உதையையும் பொறுத்துக்கொண்டு போவதற்கு சூர்யா ஒன்றும் நகைச்சுவை நடிகர் செந்தில் அல்ல என்று சூர்யாவுக்கு ஆதரவாகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
"சூர்யாவை யார் உதைக்கச் சொன்னார்களோ, அவர்களை உதையுங்கள். நான் காசு தருகி ேறன்," என்றும் அவர் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் 'ஜெய் பீம்' சர்ச்சை குறித்து பேசியபோது, "அன்புமணி எழுதிய கடிதத்தின் வலியின் உண்மைத்தன்மையை மறுப்பதற்கு இல்லை. படத்தில் இடம்பெற்றிருந்த வன்னியர் சங்க அடையாளத்தை யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கவும் முடியாது. அது வன்னியர் சங்க குறியீடு என்பது உலகத்துக்கே தெரியும். அதனைத் தவிர்த்திருக்கலாம்.
"குறிப்பிட்ட சமூக மக்களின் வலியை எடுத்து மற்றொரு சமூகத்துக்கு வலியை ஏற்படுத்தக்கூடாது என்பது எனது கருத்து," என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கூறியிருந்த பாமக மாவட்டச் செயலாளர் சித்த மல்லி பழனிசாமி மீது 5 பிரிவுகளில் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.