இரும்பை காய்ச்சி அடித்து அடித்து காய்ச்சுப்போன கை

இரும்பு அடிக்­கும் இடத்­தில் ஈக்கு என்ன வேலை என்று கேட்­ப­தைப் போல என்னை நோக்­கி­னார் கொல்லன் பட்­டறை உரி­மை­யா­ளர் ஜெய­ரா­மன், 67.

மயி­லா­டு­து­றை­யில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலை­வில் உள்ள ஒரு குக்­கி­ரா­ம­மான நெடு­ம­ரு­தூரில் ஓர் இடத்­தில் 15 அடி நீளம், 10 அடி அக­லத்­திற்குச் சிறிய வீட்டைக் கட்­டிக்­கொண்டு அதன் வாச­லில் பட்­டறை நடத்­தும் ஜெய­ரா­மன், கடந்த 43 ஆண்­டு­க­ளாக இந்தத் தொழிலைச் செய்து வரு­கி­றார்.

எனக்கு 24 வயதாக இருந்­த­போது இந்த வேலை­யைத் தொடங்­கி­னேன். என் தந்தை, உடன்­பிறந்­த­வர்­கள் எல்­லா­ரும் ஏதா­வது கூலி­வேலை செய்து பிழைத்­த­வர்­கள்.

இந்­தத் தொழில் ராஜராஜ­சோழன் காலத்­திலிருந்து தொன்று­தொட்டு இருந்து வந்­த­தா­கக் கூறு­கி­றார்­கள். விட்ட குறையோ தொட்ட குறையோ எனக்­குத் தெரி­யாது.

பல தலை­மு­றைக்கு முந்­திய என்­னு­டைய மூதா­தை­யர்­கள் இந்தத் தொழி­லைச் செய்­தார்­களா என்­பது எனக்­குத் தெரி­யாது. நான் இந்­தத் தொழிலைத் தேர்ந்து எடுத்­துக்­கொண்­டது எப்­படி என்­பதும் தெரி­ய­வில்லை.

இதே இடத்­தில் பல ஆண்டு கால­மாக, இதோ இந்­தக் கைகளால் நான் உரு­வாக்­கிய ஆயி­ரக்­க­ணக்­கான மண்­வெட்­டி­களும் அரி­வாள்­களும் கோட­ரி­களும் மக்­க­ளுக்கு, குறிப்­பாக விவ­சா­யி­க­ளுக்­குப் பேரு­த­வி­யாக இருந்து வந்­துள்­ளன என்று காய்ச்­சுப்போன தன்­னு­டைய இரண்டு கைக­ளை­யும் காட்­டி­னார் ஜெய­ரா­மன்.

கொல்­லன் பட்­டறை என்­பவை, சிறிய அள­வி­லான கிரா­மப்­புற இரும்பு வேலை நடக்­கும் இடம்.

இரும்பை பழுக்கக் காய்ச்சி அதை அடித்து மண்­வெட்­டி­யாக, கோட­ரி­யாக, அரி­வா­ளாக உரு வாக்க நெருப்­பில் கடந்து நாங்கள் படும்­பாடு கொஞ்­சம் நஞ்­சம் அல்ல.

வடக்கே இருந்து சவுக்­குக் கரி வரும். பெரிய அளவிலான முதல் தர கரி ஒரு கிலோ ரூ.35க்கு விற்­கி­றார்­கள். அது எனக்குக் கட்டுப்­படி­யா­காது. ஆகை­யால் ரூ.500 கொடுத்து ஒரு மூட்டை தூள் கரியை வாங்­கு­வேன்.

எந்த அள­வுக்கு இரும்பு தேவையோ இரும்புக் கடைக்­குப் போய் அந்த அள­வுக்கு எடை­போட்டு அப்­போ­தைய விலை­யில் அந்த உலோ­கத்தை வாங்கி வரு­வேன். இரும்­பிலே மூன்று வகை உண்டு. வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு, தேனி­ரும்பு.

இரும்­புத் தாது­வில் அதிக அளவு கரி (கார்­பன்) சேர்ந்து இருந்­தால் அது வார்ப்பு இரும்பு. வேக­மாக கீழே போட்­டால் இது உடைந்­து­விடும். கையால் அடிக்­கக்­கூ­டிய தண்­ணீர்ப் பம்பு இந்த இரும்­பால் வார்த்து உரு­வாக்­கப்­ப­டு­கிறது. ஆகை­யால்தான் இதற்கு வார்ப்பு இரும்பு என்று பெயர்.

தேனி­ரும்­பில் கரி மிக­வும் குறை­வாக இருக்­கும். ஆகை­யால் இது வளை­யும். இதை வேலைக்­குப் பயன்­ப­டுத்த முடி­யாது.

எஃகு இரும்­பு­தான் எங்­க­ளுக்கு வேலைக்கு ஒத்துவரும். அதை வாங்கி அளவுக்குத் தகுந்­தாற்­போல் வெட்­டிக்கொள்­வோம்.

எங்­கள் பட்­டறை என்­பது ஒரு குழி. அதன் மேல் கல்லை வைத்து கோபு­ரம் போல் கட்டி இருப்­போம். அந்­தக் குழி­யில் கரி போட்டு நெருப்பை உரு­வாக்­கு­வோம்.

அதற்­கான காற்று வரு­வ­தற்­காக ஊதாங்­கு­ழல் போன்ற ஒரு சிறிய சக்­க­ரம் பொருத்­தப்­பட்ட ஒரு குழாயை இணைத்து இருப்­போம்.

அந்­தச் சக்­க­ரத்தைச் சுழற்றினால் குழாய் வழி­யாக குழிக்குக் காற்று வரும். அத­னால் குழி­யில் உள்ள கரி தக­த­க­வென அனல் பறக்­கும். அதில் இரும்பை வைத்து பழுக்க வைப்­போம்.

அள­வுக்கு அதி­க­மாக இரும்பு பழுத்­து­விட்­டால் இரும்பு உரு­கிப்­போய்­வி­டும். அத­னால் பக்­கு­வ­மாக நீண்ட குறடால் பிடித்து எடுத்து இரும்பு பழுத்து இருக்­கும்­போதே அடித்து அதை வேண்­டி­ய­படி நீட்டி, மடக்கி உரு­வாக்­கு­வோம்.

இப்­போது எனக்கு நாள் ஒன்­றுக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை கிடைக்­கும். ஒரு நாளில் சுமார் நான்கு மண்­வெட்­டி­களை அடித்து உரு­வாக்கு­வேன்.

மண்­வெட்டி முக்­கி­ய­மாக வயல்­வெ­ளி­யில் விவ­சா­யத்­துக்­குப் பயன்­படும். மரம் வெட்­ட­வும் வீட்டு வேலை­க­ளுக்­கும் அரி­வாள் பயன்­படும். விற­கைப் பிளக்க கோடரி பயன்­படும். யாரா­வது வந்­தால் பட்டறை­யில் உத­விக்கு வைத்­துக்­கொள்­வேன். இல்லை என்­றால் நானே எல்லா வேலை­யை­யும் பார்ப்­பேன்.

மண்­வெட்­டியை அடித்து உரு­வாக்­கி­ய­தும் கரு­வ­ம­ரம், தேக்கு மரக்­கி­ளை­க­ளைக் கொண்டு செதுக்கி, இழைத்து கைப்­பி­டியை உரு­வாக்கி சூட்­டோடு சூடாக மண்­வெட்­டி­யில் அதைப் பொருத்தி முழு­மை­யாக்கி கொடுத்­து­வி­டு­வேன்.

இப்­ப­டி­யா­கச் சம்­பா­தித்­து­த்தான் என்­னு­டைய மூன்று புதல்­வி­க­ளை­யும் நல்ல இடத்­தில் திரு­ம­ணம் செய்து கொடுத்­தேன். எனக்கு ஆறு பேரப்­பிள்­ளை­கள் இருக்­கி­றார்­கள்.

யார் இருந்­தா­லும் யார் இல்­லா­விட்­டா­லும் நான் நம்­பு­வது என் கைத்­தொ­ழி­லைத்­தான் என்­கி­றார் இந்த முதி­ய­வர்.

டிராக்­டர் போன்ற சாத­னங்­கள் வந்­த­தால் எங்­கள் தொழில் மிக­வும் படுத்­து­விட்­டது. மண்­வெட்­டிக்­கான தேவை குறைந்­து­விட்­டது.

பொது­வாக எங்­க­ளுக்கு- இந்தத் தொழிலுக்கு நகர்ப்­பு­றங்­களில் வேலை­யில்லை. கிரா­மப்புறங்­களில்­தான் காலத்தை ஓட்­டு­கி­றோம்.

நான் இருக்கும் வரை இதைத் தொடர்வேன். எனக்குப் பிறகு என் பட்டறையை யாராவது நடத்து வார்களா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த இந்தத் தொழிலைக் கைவிடவேமாட்டேன். என்னால் முடிந்தவரை தொடர்ந்து நடத்தி வருவேன்.

மேலும்மேலும் மண்வெட்டிகளை, அரிவாள்களை, கோடரிகளை உரு வாக்கி பாமரர்களுக்கு, விவசாயி களுக்கு உதவுவேன். அப்படியே நானும் என் காலத்தை ஓட்டுவேன் என்கிறார் கொல்லன் பட்டறை நடத்தும் ஜெயராமன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!