சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 15 பேரைத் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது தமிழகக் காவல்துறை.
மேலும், தலைமறைவாக உள்ள அவர்களுடைய புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வந்த 'ஹிஜாவு அசோசியேட்ஸ்' என்ற நிதி நிறுவனம் பொது மக்களிடம் இருந்து பல நூறு கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளது.
தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 விழுக்காடு வட்டி தருவதாக அந்நிறுவனம் கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டது. அந்நிறுவனத்தின் முகவர்களும் பணியாளர்களும் தமிழகம் முழுவதும் நட்சத்திர தங்குவிடுதிகளில் கூட்டங்கள் நடத்தி கவர்ச்சி அறிவிப்புகளைப் பொதுமக்கள் நம்பும்படி பிரசாரம் செய்தனர்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் 14,126 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,046 கோடி வசூலிக்கப்பட்டது.
ஓரிரு மாதங்கள் வட்டித்தொகையைக் கொடுத்த ஹிஜாவு நிறுவனம் பின்னர் முன்னறிவிப்பு இன்று திடீரென மூடப்பட்டது.
இதையடுத்து, அந்நிறுவனம் மீது மோசடி வழக்குப் பதிவானது. அந்நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட இடங்களில் காவல்துறை சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் சிலர் கைதாகினர். எனினும் 15 முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகினர்.
அவர்களில் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், இவர்களைத் தலைமறைவு குற்றவாளிகளின் எனக்குறிப்பிட்டு புகைப்படங்களைப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வெளியிட்டது.
மேலும், பொதுமக்கள் அவர்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல் உண்மையானதாக இருந்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்றும் தேடுதல் நடவடிக்கை நீடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

