கால்வாய் வெட்டும் ‘என்எல்சி’: காவல்துறையினர் குவிப்பு; பேருந்துகள் மீது கல்வீச்சு

கால்வாய் வெட்டும் ‘என்எல்சி’: காவல்துறையினர் குவிப்பு; பேருந்துகள் மீது கல்வீச்சு

2 mins read
63b30b2e-df8e-4897-a067-c6a2c699210a
சேத்தியாதோப்பு பகுதியில் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. - படம்: ஊடகம்

கடலூர்: நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) மேற்கொண்டு வரும் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

பல இடங்களில் சாலை மறியல்கள் நடந்து வரும் நிலையில், அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக என்எல்சி நிறுவனம் ஏராளமான விளை நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்களில் தற்போது அந்நிறுவனம் கால்வாய் வெட்டும் பணியை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், அறுவடைக்காக காத்திருக்கும் வேளையில், சுரங்கப் பணிகளை மேற்கொள்வது நியாயமற்ற செயல் என பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை அழித்து, அங்கு வாய்க்கால் வெட்டப்பட்டது ஏற்க முடியாத செயல் என்று குற்றம்சாட்டி உள்ள விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருகின்றன.

சுரங்கப்பணிகள் நடைபெற்று வரும் சேத்தியாதோப்பு, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை என்எல்சி நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது, பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன.

பண்ருட்டி, விருத்தாசலம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 17 அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிலவும் பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகளில் தடுப்பரண்கள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்படுகிறது.

வளையமாதேவி உள்ளிட்ட சில கிராமங்களில் வெளி ஆள்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.

கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில் கலவரத் தடுப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரம், தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வெள்ளிக்கிழமை பாமக சார்பில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.

எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பாமக அனுமதிக்காது என்றும் என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற பாமகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
போராட்டம்