நெல்லை: சாதி வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் நிலவி வரும் நாங்குநேரி பகுதியில் இரண்டு வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் காவல்துறை கண்காணிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.
அங்கு வசித்து வரும் வானுமாமலை (29 வயது) என்பவர் வீட்டின் மீது சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டுச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் அதே பகுதியில் வசிக்கும் வானுமாமலையின் மாமனார் வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதில் இரு வீடுகளிலும் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. மேலும் வீட்டுக்குள் இருந்த மேசை, நாற்காலிகள் போன்றவை தீப்பிடித்து எரிந்தன.
நாங்குநேரியில் ஏற்கெனவே பதற்றம் நிலவுவதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தப் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளது.
முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக இத்தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து குண்டு வீசிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேர் கைதாகியுள்ளனர்.

