சென்னை: இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பலால் தென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வரவிருக்கும் ஷி யான் உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் என அறிக்கை ஒன்றில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் உளவுக் கப்பல் அடுத்த மாதம் இலங்கையில் உள்ள துறைமுகங்களில் 17 நாள்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாகவும் கிடைத்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
சீன உளவுக் கப்பலின் ஆராய்ச்சி என்பது தென் மாநிலங்களை உளவு பார்ப்பதுதான் என்பதால், இது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.
“சீன உளவுக் கப்பல் இரு நாள்களுக்கு முன் மலேசியாவை அடுத்த மலாக்கா நீரிணைக்கு வந்து விட்டதாவும் அங்கிருந்து அக்டோபர் மாத இறுதியில் இலங்கையில் கொழும்பு, அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களுக்கு வந்து சேரும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
“இலங்கை துறைமுகங்களுக்குள் நுழைய சீன உளவுக்கப்பலுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அதே நேரத்தில் அது தொடர்பான கோரிக்கை இலங்கை அரசின் ஆய்வில் உள்ளது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவே ஒரு மோசடி.
“இந்திய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சிதான் சீனக் கப்பலுக்கு அனுமதி அளிக்காததுபோல இலங்கை அரசு காட்டிக் கொள்கிறது. ஆனால், கடைசி நேரத்தில் சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு கண்டிப்பாக அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.
“சீன உளவுக் கப்பல் மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். பல நூறு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக் கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் இந்தக் கப்பலுக்கு உண்டு,” என்று ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சீன உளவுக் கப்பலால் தமிழகத்தில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் எளிதில் உளவு பார்த்து, உரிய தகவல்களை சேகரித்து விட முடியும் என்று ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.
“அணு சக்தி ஆராய்ச்சி நிலையங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் எத்தகைய தொடர்பு கொண்டவை என்பதை அறிந்தவர்களால், சீன கப்பலின் இலங்கை வருகை எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
“ஆசியாவை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் தனது எதிர்காலத் திட்டத்துக்கு இந்தியா தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதும் சீனா, இந்தியாவைச் சுற்றிலும் தனது பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தி, ராணுவ ரீதியாக முடக்குவதற்கு திட்டமிட்டு வருகிறது. அதற்காகவே ஒன்றன்பின் ஒன்றாக உளவுக்கப்பல்களை அனுப்பி இந்தியாவை உளவு பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது,” என்று ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.


