திருச்சி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகைக்கடை நடத்தி பல கோடி ரூபாய் சுருட்டிய தம்பதியரை, தேடப்படும் நபர்களாக அறிவித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரணவ் ஜூவல்லரி என்ற பெயரில் திருச்சியில் நகைக்கடை தொடங்கிய மதன், அவருடைய மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிட்டுக் கடையை பிரபலப்படுத்தினர்.
பின்னர் மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் கிளைகள் தொடங்கப்பட்டன.
இதையடுத்து, தங்கள் கடையில் நகைகள் வாங்கினால் செய்கூலி, சேதாரம் இல்லை என்றும் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன என்றும் இத்தம்பதியர் அறிவித்தனர்.
சிறு சேமிப்பு, முதலீட்டுத் திட்டங்களால் கவரப்பட்ட ஏராளமான வாடிக்கையாளர்கள் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி பிரணவ் நகைக்கடை நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு முதிர்வுத் தொகையை அளிக்கவில்லை.
இதையடுத்து, அவர்களில் பலர் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் அடுத்தடுத்து புகார்களை அளித்தனர்.
இந்நிலையில், திருச்சி மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் இயங்கி வந்த பிரணவ் நகைக்கடைகள் திடீரென மூடுவிழா கண்டன. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
இந்நிலையில், பலருக்கு கவரிங் நகைகளைக் கொடுத்தும் பிரணவ் நகைக்கடை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விசாரணையில், மதன் - கார்த்திகா தம்பதி 47 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது உறுதியாகி இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட மதன் தம்பதி தலைமறைவாகிவிட்டனர். இருவரும் தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்றும் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் காவல்துறை தெரிவித்தது.

