பதவி இறக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

பதவி இறக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

2 mins read
b8bc3789-a1d6-4517-af41-a10ff1d2e75e
சென்னை எழும்பூரில் புதன்கிழமை உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ் நாட்டில் ஏறக்குறைய 1,300 தலைமை ஆசிரியர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி இறக்கம் செய்ய தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே, இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

அந்தப் போராட்டத்திற்கு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் போ. அன்பரசன் தலைமை வகித்தார். சென்னையில் தொடர்ந்து மழை பெய்த நிலையிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புதன்கிழமை ஒன்றுகூடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசன் , “தமிழ் நாடு கல்வித்துறையின் இந்தப் போக்கால் தலைமை ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் உயர் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைப் பதவி இறக்கம் செய்யும் நட வடிக்கையைக் கைவிட வேண்டும்.

“இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, தலைமை ஆசிரியர்களைப் பதவி இறக்கம் செய்வது இல்லை என்று கொள்கைரீதியிலான முடிவு எடுக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் பணிநிலையில் இருந்து முது கலைப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றவர்கள், முன்னுரிமை அடிப்படையில் பணிமாறுதல் மூலம் நியமனம் பெற்று உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றனர்.

“இந்தப் பதவி உயர்வை எதிர்த்து ஆசிரியர்கள் சிலர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணி மாறுதல் மூலம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கியது தவறு என்று தீர்ப்பளித்தது. தமிழக அரசு தலைமை ஆசிரியர்களைப் பதவி இறக்கம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரிடம் மனுக் கொடுத்தும் சரியான பதில் கிடைக்கவில்லை,” என்றார் திரு அன்பரசன்.

குறிப்புச் சொற்கள்
ஆசிரியர்கள்போராட்டம்