நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

2 mins read
293da89b-fac1-492b-b9c8-89c4f913d63a
நடிகர் மன்சூர் அலிகான். - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான், காணொளியை முழுமையாகப் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது நடிகை திரிஷா தரப்பில், மூன்று பேருக்கும் எதிராக ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியாது என்றும், தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த மன்சூர் அலிகான், குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்றும், தனது கருத்து எதிர்ப்புக் கருத்துதான் என்றும் வாதிடப்பட்டது.

மன்சூர் அலிகான் தரப்பில், மூன்று பேருக்கு எதிராகவும் ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியும் என்றும், தான் பேசிய காணொளியைத் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,”மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகைகள் கூறிய கருத்தை அவதூறாகக் கருத முடியாது,” என்று கூறினார்.

மேலும், பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்புதான். நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற நீதிபதி, மன்சூர் அலிகானின் மனுவைத் தள்ளுபடி செய்தார். அத்துடன் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் கட்டுமாறும் அபராதத் தொகையை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்
உயர் நீதிமன்றம்மன்சூர் அலிகான்