தென் மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி: முதல்வர்

தென் மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி: முதல்வர்

2 mins read
7ebc0869-f0a4-4fc5-ae1b-7d855d7aa308
முதல்வர் மு.க. ஸ்டாலின். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 4
Google News Preferred Icon

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் கனமழையால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நான்கு மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மாநில அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500க்கு மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

“அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்கள் நலன் காத்திட அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

“அதோடு ஆறு நாள்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போன்றோரும் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர்.

“மாநிலத் தலைமைச் செயலாளரும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு , நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்,” என்று முதல்வர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வேளையில், கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள மாநில மக்கள் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில், “கேரள உடன்பிறப்புகளின் அன்புக்கு நன்றி,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
கனமழைஅரசாங்கம்உதவிபாதிப்பு