தந்தை பெரியாரின் 50வது நினைவு நாள்

தந்தை பெரியாரின் 50வது நினைவு நாள்

2 mins read
e3480009-12c3-4c89-b4c0-d3fc6e596124
தந்தை பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதல்வர். - படம்: தினத்தந்தி
Google News Preferred Icon

சென்னை: தந்தை பெரியாரின் 50வது நினைவு நாள் டிசம்பர் 24ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதல்வருடன் சென்ற அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகம் சார்பில் சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் முக்கியப் புள்ளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு வந்து மாலை அணிவித்து வணங்கினர்.

பின்னர் அவர்கள் அமைதிப் பேரணியாக வேப்பேரி திடலுக்குச் சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு காங்கிரஸ், தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரியாரை நினைவுகூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“மூடநம்பிக்கைகளால் மூழ்கிக் கிடந்த சமூகத்தை விழித்தெழ வைத்த பகுத்தறிவாளர், தீண்டாமைக்கு எதிராக வெகுண்டெழுந்த புரட்சியாளர், நாடெங்கும் சமத்துவம் நிலவப் போராடிய மாபெரும் தலைவர், தென்னிந்திய அரசியலின் மூத்த முன்னோடி, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நினைவு நாளில், அவரின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்,” என்று அவர் தம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்