கார் ஓட்டிய சிறுவர்கள் கார் மோதி மரணம்

கார் ஓட்டிய சிறுவர்கள் கார் மோதி மரணம்

1 mins read
bcdaf068-3e7f-48a7-a955-8d3fc4bc35a0
எதிரே வந்த கார் மோதியதில் சிறுவர்கள் சென்ற கார் நொறுங்கி இரு துண்டுகளாகச் சிதறியது. - படம்: தமிழக ஊடகம்

பரமத்தி: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே இரு சிறுவர்கள் ஓட்டி வந்த காரும் மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை அருகே பெரிய மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ், 17. அவரது உறவினர் மகன் சுதர்சன், 14.

இவர்கள் இருவரும் திங்கட்கிழமை (ஜூன் 10) இரவு பரமத்தி பகுதிக்கு காரில் சென்று விட்டு மீண்டும் கபிலர்மலை செல்ல ஜேடர்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த காரும் சிறுவர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் லோகேஷ், சுதர்சன் ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விரைந்து வந்த ஜேடர்பாளையம் காவல்துறையினர் சிறுவர்களின் உடலை வேலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிறுவர்கள் ஓட்டிச் சென்ற ஆம்னி கார் அப்பளம் போல் நொறுங்கி இருவேறு பகுதியாகக் கிடந்தது.

எதிர்த்திசையில் இருந்து வந்து மோதிய காரில் இருந்த விக்னேஷ் என்பவர் படுகாயமடைந்து நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறிப்புச் சொற்கள்