பாலியல் வழக்குகளை உடனடியாகப் பதிவுசெய்ய புதிய இணையத்தளம்

பாலியல் வழக்குகளை உடனடியாகப் பதிவுசெய்ய புதிய இணையத்தளம்

2 mins read
b3652388-76c1-444f-bedd-dc30402132b7
‘போக்சோ’ இணையத்தளத்தை அறிமுகப்படுத்திய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளைக் காவல்துறை, ‘போக்சோ’ நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை ஆகிய துறைகள் உடனே பதிவு செய்ய ஏதுவாக புதிய ‘போக்சோ’ இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களால் குழந்தைகளுக்கு உதவுவதற்கென ‘போக்சோ’ இணைய முகப்பு, குழந்தைப் பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல சேவைகளைக் கொண்ட செயலியைத் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளை உடனடியாக வழங்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘போக்சோ’ சட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் போக்சோவுக்கு தனி இணையத்தளம் உருவாக்கும்படி அறிவுறுத்தினார்.

அதனையடுத்து, சென்னை முகாம் அலுவலகத்தில், ‘போக்சோ’ இணையத்தளம் (https://www.pocsoportal.tn.gov.in) தனி நபர் பராமரிப்புத் திட்டச் செயலியையும், குழந்தைப் பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வதற்கான செயலியையும், கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான கைப்பேசி செயலியையும் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் குழந்தைகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படுவது முதல் நீதிமன்ற இறுதித் தீர்ப்புவரை ஒவ்வொரு நடவடிக்கையையும் துறை அதிகாரிகள் கண்காணித்து, வழக்குகளை விரைவுபடுத்த முடியும்.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி, எவரையும் அணுகாமல், இணையத்தளம் மூலமாக நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு செலுத்தவும் முடியும்.

குழந்தை தொடர்பான விவரங்கள் எவருக்கும் தெரியாத வண்ணம் இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம்பெண்கள் ஆகியோர் தங்களுக்குத் தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிதாகப் பெற, அருகிலுள்ள இ-சேவை மையங்களில், http://www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தங்களின் விவரங்களைப் பதிவுசெய்து, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராகலாம்.

குறிப்புச் சொற்கள்