You are here

சிங்க‌ப்பூர்

இரு அடுக்குப் பேருந்துக்கு அடியில் மாட்டிக்கொண்டு தவித்த ஆடவர்

ஹவ்காங் அவென்யூ 9ல் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் இரு அடுக்குப் பேருந்துக்கு அடியில் ஆடவர் ஒருவர் சுமார் 45 நிமிடங்களுக்கு மாட்டிக்கொண்டார். காலை 10.30 மணி அளவில் அந்தப் பாதசாரி மீது பேருந்து எண் 72 மோதியதாகக் கூறப்படுகிறது. அந்த 51 வயது ஆடவரின் வலது கால் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அதிகாரிகளால் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட அந்த ஆடவர், டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

வெளிநாடு வாழ் சிங்கப்பூரருக்கும் மெடி‌ஷீல்டு லைஃப் காப்புறுதி

வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப் பூரர்களும் மெடி‌ஷீல்டு லைஃப் மருத்துவக் காப்புறுதித் திட்டத் துக்குத் தொடர்ந்து தகுதி பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் சிலர், குறிப்பிட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் மெடி ‌ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத் துக்காகச் செலுத்தவேண்டிய சந்தா தொகையிலிருந்து விலக்கு பெறலாம். மெடி‌ஷீல்டு லைஃப் மன்றத்தின் இந்தப் பரிந்துரைகளை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. பரிந்துரைகளை முன்வைப்பதற்கு முன்பு வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களிடமிருந்தும் உள்ளூ ரிலேயே வசிக்கும் சிங்கப் பூரர்களிடமிருந்தும் மன்றம் கருத்துகளைச் சேகரித்தது.

பிடோக் நார்த் வட்டாரத்தில் இனி ஸிக்கா பாதிப்பில்லை

பிடோக் நார்த் வட்டாரத்தில் இனி ஸிக்கா பாதிப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிடோக் நார்த் அவென்யூ 3, பிடோக் நார்த் அவென்யூ 2, பிடோக் நார்த் ஸ்திரீட் 3 ஆகிய இடங்களையும் சேர்த்து இந்த வட்டாரத்தில் ஐந்து பேர் ஸிக்காவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த இரண்டு வாரங்களாக இந்த வட்டாரத்தில் யாருக்கும் ஸிக்கா தொற்று ஏற்படவில்லை. சிங்கப்பூரில் இதுவரை 398 பேர் ஸிக்காவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

$1.1 மி. கையாடியதற்கு ஆறு ஆண்டு சிறை

சிங்கப்பூரைச் சேர்ந்த சீமாட்டி ஒருவரிடமிருந்து 1.1 மில்லியன் வெள்ளி கையாடிய குற்றத்துக்காக முன்னாள் சுற்றுப்பயண வழிகாட்டி யாங் யிங்குக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. திருவாட்டி சுங் கின் சுன் சீனாவுக்குப் பயணம் மேற் கொண்டிருந்தபோது அவருடன் 42 வயது யாங்குக்கு நட்பு ஏற்பட்டது. 2009ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வந்த யாங், இயோ சூ காங் வட்டாரத்தில் அமைந்துள்ள திருவாட்டி சுங்கின் பங்களா வீட்டில் குடியேறினார். திருவாட்டி சுங்கிடமிருந்து 2010ஆம் ஆண்டில் 500,000 வெள்ளியையும் 2012ஆம் ஆண்டில் 600,000 வெள்ளியையும் கையாடியதை யாங் ஒப்புக் கொண்டார்.

‘கேபிஇ’ விரைவுச்சாலையில் ‘இஆர்பி’

நிலப்போக்குவரத்து ஆணையம் காலாங்- பாயலேபார் விரைவுச்சாலையில் மின்னியல் சாலைக் கட்டணத்தை (இஆர்பி) முதல் முறையாக அறிமுகப்படுத்த திட்டமிடுவதாக நேற்று கூறியது. அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இது உதவும் என்று வாரியம் சொன்னது. கேபிஇ சுரங்கப்பாதைக்கு முன்னால் இருக்கும் மின்னியல் சாலைக் கட்டண நுழைவாயிலை இயக்க ஆலோசித்து வருவதாக வாரியம் தெரிவித்தது. வடக்கு-கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு அப்பகுதியின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தி வருவதாக வாரியம் கூறியது.

பிரதமர் லீ: வெளியுறவில் உறுதியான நிலைவேண்டும்

பிரதமர் லீ சியன் லூங்

சிங்கப்பூர் நேரத்துக்கு ஏற்ப சாய்ந்து செயல்படும் நாடு என்ற எண்ணம் மற்ற நாடுகளுக்கு ஒருபோதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டிருக்கிறார். “சிங்கப்பூர் தனக்குச் சொந்த மான, உறுதியான ஒரு நிலையை கொண்டிருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் எந்த நாட்டில் எந்தத் தலைநகரில் இருந்தாலும் தன் சொந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும்,” என்று திரு லீ குறிப்பிட்டார். பிரதமர், சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் அரசதந் திர உறவு ஏற்பட்டு 50 ஆண்டு காலம் ஆவதைக் குறிக்கும் வகை யில் அந்த நாட்டிற்கு நான்கு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண் டிருந்தார். அந்தப் பயணம் நேற்று முடிந்தது.

இணையம் வழி பந்தயம் கட்டலாம்

இணையம் வழி பந்தயம் கட்டலாம்

சிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயல்படும் சிங்கப்பூர் பூல்ஸ், சிங்கப்பூர் டர்ஃப் கிளப் ஆகிய இரண்டு நிறு வனங்களுக்கு இணையம் மூலம் சூதாட்டப் பந்தயம் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சிங்கப்பூரில் அடுத்த இரண்டு மாத காலத்தில் இணையத்தில் சூதாட்டப் பந்தயம் கட்டும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். தொலைதூர சூதாட்டச் சட்டத்திலிருந்து இந்த இரு அமைப்புகளுக்கும் உள்துறை அமைச்சு விலக்கு அளித்திருக் கிறது. இந்தச் சட்டம் இணையம் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் சூதாடுவதைத் தடுக்கிறது.

லீ குவான் இயூ வாரிசுகள் மனு தள்ளுபடி

சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் இயூவின் வாரிசு களான டாக்டர் லீ வெய் லிங், திரு லீ சியன் யாங் ஆகிய திரு லீயின் இளைய பிள்ளைகள் இருவர் அரசாங்கத்திற்கு எதிராக செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த 1980 காலகட்டத்தில் பதிவான திரு லீ குவான் இயூவின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளின் நகல்களைப் பயன்படுத்தவும் அவற்றைப் பெறவும் தங்களுக்கு உரிமை இருப்பதாக அந்த வாரிசுகள் கோரியிருந்தனர். அவற்றைப் பெறவும் நகல் எடுக்கவும் பயன்படுத்தவும் அனுமதி கொடுக்க லீ குவான் இயூவிற்கு உரிமை உண்டு என்ற அரசாங்கத்தின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

வலைப்பதிவாளருக்கு சிறை, அபராதம்

சமய உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக பதின்ம வயது வலைப்பதிவாளர் ஏமஸ் யீக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதே குற்றச்செயலுக்காக அவருக்கு 15 மாதங்களுக்கு முன்பாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த 17 வயது இளைஞர் எட்டு குற்றச்சாட்டுகளின் பேரில் இப்போது தண்டனை பெற்றிருக்கிறார்.

உலக வரிசையில் முதல் பத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், டைம்ஸ் உலக உயர்கல்வி நிலையங்கள் பட்டியலில் தலைசிறந்த 10 இடங்களில் ஒன்றாக வலுவான இடத்தைப் பிடித்திருக்கிறது. பட்டியலிடப்பட்ட எட்டு ஏட்டுக்கல்விப் பாடங்களில் இரண்டில் அது இந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. பொறியியல் தொழில்நுட்பத் துறையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், லண்டன் இம்பீரியல் கல்லூரியுடன் சேர்ந்து ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

Pages