You are here

திரைச்செய்தி

நாயகிகளைப் பார்த்து வியந்த படக்குழு

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளி யான ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. இதில் ராய் லட்சுமி, வரலட்சுமி என இரண்டு நாயகிகள். நாயகனாக ஜெய் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் அலாதியானது என்று சொல்லும் ராய் லட்சுமி, ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பின்பு ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வாமனன்’ என்ற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அச் சமயம் எடுக்கப்பட்ட சில புகைப் படங்களை ஜெய் இன்றளவும் வைத் துள்ளாராம்.

பிடிக்காததை தவிர்க்கிறேன் - மடோனா

நடித்தால் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என நடிகைகள் பிடிவாதம் பிடித்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் எத்த கைய வேடமாக இருந்தாலும் பரவாயில்லை எனும் முடிவுடன் பல இளம் நாயகிகள் களம் இறங்கியுள்ளனர். ரசிகர்களைக் கவர வேண்டும், நல்ல நடிகை எனப் பெயரெடுக்க வேண்டும் என்பது மட்டுமே இளம் நாயகிகளின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் வில்லியாக நடிக்கத் தயார் என்கிறார் நடிகை மடோனா சபாஸ்டியன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்பதில் தமக்கு அறவே விருப்பமில்லை என்கிறார்.

முதல்வர் மனைவி வேடத்தில் மஞ்சிமா

மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகிறது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபதி. இந்நிலையில் இவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகனுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பிரமாண்ட மாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று மஞ்சிமாவும் ஆர்வமாக உள்ளாராம். அவர் ஒப்பந்தமாகும் பட்சத்தில் இது தெலுங்கில் அவருக்கு இரண்டாவது படமாக அமையும்.

உணர்ச்சிகரமான கதையில் அமலாபால்

‘மேயாத மான்’ படம் இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படத்தில் அமலா பால் ஒப்பந்தமாகி உள்ளார். மிக உணர்ச்சிகரமான கதைக்களத்தைக் கொண்ட படமாம் இது. அதனால் கிடைத்த வாய்ப்பை நழுவவிட அமலாபாலுக்கு மனமில்லையாம். வேறு சில வாய்ப்புகளை உதறிவிட்டு இப்படத்தில் நடிக்கிறார்.

‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’ - தெலுங்குப் படத்தின் மறுபதிப்பு

அடிதடி, குத்துப்பாட்டு, படுவேகமான திரைக்கதை என தெலுங்குப் படங்களுக்கே உரிய அம்சங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வெளியாகி வெற்றிகண்ட ‘சீத்தம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு’ படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளனர். ‘நெஞ்சமெல் லாம் பல வண்ணம்’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ள இப்படத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் நாயகர்களாகவும், அஞ்சலி, சமந்தா நாயகிகளாகவும் நடித்துள்ளனர். “குடும்ப உணர்வுகளை, உறவுகளை பின்னிப்பிணைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை இது. வெங்கடேஷ், மகேஷ் பாபு இருவரும் சகோதரர்களாக நடித்துள்ளனர். மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.

‘அடங்காதே’ படத்தின் இசை வெளியீடு

‘அடங்காதே’ படத்தின் இசை வெளியீடு எதிர்வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தகவலைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஜி.வி. பிரகா‌ஷும் சுரபியும் ஜோடி சேர்ந்துள்ளனர். மேலும் சரத்குமார், மந்திராபேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றனவாம்.

நட்பால் கிடைத்த நல்ல வாய்ப்பு

வங்காள மொழியில் வெற்றி பெற்ற ‘பொரிசோய்’ படம் மூலம் திரையுல கில் அறிமுகமானவர் மிஷ்டி. தற் போது அதர்வா நாயகனாக நடிக் கும் ‘செம போத ஆகாத’ படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படம் இது. “வங்காள மொழியில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் ரூபாலி குகாவும் பத்ரி வெங்கடேசும் நல்ல நண்பர்கள். அந்த நட்புதான் தமிழ்த் திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியது. “ரூபாலி என்னைப் பற்றி பத்ரி யிடம் கூறியுள்ளார். அதன் பிறகு எனது முதல் படத்தைப் பார்த்த பத்ரி திருப்தியடைந்து தமிழுக்கு அழைத்து வந்துள்ளார்,” என்று சொல்லும் மிஷ்டி மேற்கு வங்கா ளத்தைச் சேர்ந்தவர்.

மாடியிலிருந்து குதித்த கதாநாயகி

‘அழகுக் குட்டிச் செல்லம்’ படத்தில் அறிமுகமான கிரிஷா க்ரூப் தற்போது தமிழில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் மும்முரமாக உள்ளார். மலையாளக் கரையோரத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ்ப் படங்களில் நடிப்பதில்தான் ஆர்வமாக உள்ளாராம். அம்மணியின் பூர்வீகம் கேரளா. ஆனால் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் மும்பையில்தானாம். ‘கோலி சோடா-2’இல் தனது நடிப்பைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டியது மகிழ்ச்சியையும் சினிமா மீதான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது என்கிறார். “அப்படத்துக்காக மொட்டை மாடியில் இருந்து குதித்த காட் சியை மறக்கவே இயலாது.

சரண்யா: கடவுள் அருளால் எல்லாம் நன்றாக நடக்கிறது

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்திலும் அம்மா வேடத்தில் நடித்து முடித்துள்ளார் சரண்யா. ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் துருவா, ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அஞ்சனா பிரேமும் மற்றொரு நாயகியாக நடித்துள்ளனர். இதில் துருவாவின் தாயாக வருகிறார் சரண்யா பொன்வண்ணன்.

சில படங்களில் மட்டுமே மிகுந்த ஈடுபாட்டுடன் நடிக்கத் தோன்றும் என்று குறிப்பிடும் சரண்யா, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படம் அந்த ரகத்தைச் சேர்ந்தது என்கிறார்.

செப்டம்பரில் வெளியீடு காண்கிறது விக்ரமின் ‘சாமி ஸ்கொயர்’

‘சாமி ஸ்கொயர்’ செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “மத்திய மற்றும் மாநிலத் தணிக்கைக் குழுக்களின் அனுமதி கிடைத்தவுடன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். செப்டம்பர் மாதத்தைத்தான் குறி வைத்துள்ளோம்,” என்று தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது. ஐஸ்வர்யா ராஜே‌ஷும் மற்றொரு நாயகியாக நடித்துள்ளார். வில்லனாக பாபி சிம்ஹாவும் பிரபு, இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ்கான் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Pages