சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 22) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 1,016 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐக் கடந்தது.
புதிய சம்பவங்களில் 15 சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
புதிய சம்பவங்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,141 ஆனது.
ஊழியர் தங்கும் விடுதிகளில் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதையடுத்து, அங்கு கிருமித்தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று கண்டோரின் சராசரி தினசரி எண்ணிக்கை 28 ஆகக் குறைந்திருப்பதாக நேற்று சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல் தெரிவித்தது. ஒரு வாரத்துக்கு முன்பு அந்த சராசரி 39 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், தொடர்புகள் கண்டறியப்படாத புதிய சம்பவங்களின் எண்ணிக்கை குறையவில்லை. இது "அதிக அளவிலான கண்டறியப்படாத" கிருமித்தொற்று நோயாளிகள் இருப்பதைக் காட்டுவதாக நேற்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கை ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், தற்போது நடைமுறையிலிருக்கும் விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையிலான வேலையிடங்கள் மூடப்படும் என்றும் அதன் மூலம் அத்தியாவசியச் சேவைகள் வழங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குடிபானங்கள், நொறுக்குத் தீனிகள் மட்டும் விற்கக்கூடிய சில கடைகள், முடி திருத்தும் கடைகள் போன்றவையும் நேற்று இரவு 11.59 உடன் மூடப்பட்டன.
அதிக எண்ணிக்கையிலான மக்கள் சென்று வரும் நான்கு ஈரச்சந்தைகள் அடையாளம் காணப்பட்டு அங்கு கட்டுப்பாடுகள் நடப்புக்குக் கொண்டுவரப்பட்டன. அங்கு செல்வோரின் அடையாள அட்டையின் இறுதி எண் ஒற்றையா, இரட்டையா என்பதைப் பொறுத்து முறையே ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை தேதிகளில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று முதல் அனைத்து பேரங்காடிகள், கடைத்தொகுதிகள் ஆகியவற்றில் வெப்பநிலைச் சோதனைகள் மேற்கொள்ளப்படும். அங்கு செல்வோரின் தகவல்கள் சேகரிக்கப்படும் என்று வர்த்தக, தொழில்துறை அமைச்சு நேற்றிரவு தெரிவித்தது.
மாணவர்களின் பள்ளி விடுமுறை வழக்கமான ஜூன் மாதத்துக்குப் பதிலாக இவ்வாண்டு முன்னதாகவே, அதாவது, மே மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கும். பள்ளி விடுமுறைக்குப் பிறகான வகுப்புகள் ஜூன் மாதம் 2ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று நேற்று கல்வி அமைச்சு தெரிவித்தது.


