மேலும் மூவருக்கு கொரோனா கிருமித்தொற்று; 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்

சிங்கப்பூரில் மேலும் மூவர் நொவெல் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுகாதார அமைச்சு இன்று (பிப்ரவரி 9) உறுதிப்படுத்தியது.

அம்மூவரில் ஒருவர் 71 வயது நிரம்பிய சிங்கப்பூர் ஆடவர், மற்ற இருவர் 39 வயது பங்ளாதே‌ஷ் ஊழியர், 54 வயது நிரம்பிய சிங்கப்பூரர் ஆவர். மூவருக்கும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை, அவர்கள் அண்மையில் சீனாவுக்குப் பயணம் செய்யவும் இல்லை.

சுகாதார அமைச்சு இன்று இரவு 10 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.

சிங்கப்பூரில் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43க்குக் கூடியுள்ளது. அவர்களில் ஆறு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (intensive care unit) சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் கிருமி தொற்றிய 41ஆம் நபரான 71 வயது ஆடவர் பிப்ரவரி 1ஆம் தேதியும் 5ஆம் தேதியும் நோய்க்கான அறிகுறிகளுக்காக பொது மருத்துவரிடம் பெற்றார். அதன் பிறகு பிப்ரவரி 6ஆம் தேதி ஹவ்காங் பலதுறை மருத்துவமனையிலும் மறுநாள் டான் டோக் செங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். பிப்ரவரி 8ஆம் தேதி அவருக்கு நொவெல் கொரோனா கிருமித்தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் சிங்கப்பூர் தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் (National Centre for Infectious Diseases or NCID) சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக அவர் பாயா லேபார் மெதடிஸ்ட் தேவாலயத்திற்கும் பிராடல் ஹைட்ஸ் குடியிருப்பாளர் குழுவிற்கும் சென்றுள்ளார். 755, அப்பர் சிராங்கூன் ரோட்டில் உள்ள 'பேட்ஸ் ஸ்கூல்ஹவுஸ் கோவன்' பாலர் பள்ளியில் தமது பேரக்குழந்தையை அழைத்து வரச் சென்றுள்ளார். அவர் அப்பர் சிராங்கூன் ரோட்டில் வசிக்கிறார்.

இரண்டாவது சம்பவம், அதாவது சிங்கப்பூரின் 42வது கிருமித் தொற்று சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் 39 வயது பங்ளாதே‌ஷ் ஊழியர். அவர் கடந்த சனிக்கிழமை சிங்கப்பூர் தொற்றுநோய் தடுப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக லிட்டில் இந்தியாவின் முஸ்தஃபா செண்டருக்குச் சென்றுள்ளார், காக்கி புக்கிட்டில் உள்ள லியோ தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.

43ஆவது சம்பவத்தில் 54 வயது சிங்கப்பூர் ஆடவர் செங்காங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 26ஆம் தேதி மலேசியாவுக்குச் சென்றுள்ளார்.

இதுவரை கிருமி தொற்றியுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று மொத்தம் 989 பேரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் (பிப்ரவரி 9 நண்பகல் நேரப்படி). அவர்களில் 892 பேர் சிங்கப்பூரில் உள்ளனர், 845 பேர் தொடர்பு கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 47 பேரை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன என்று சுகாதார அமைச்சின் அறிக்கை விவரித்தது.

சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நோய்ப் பரவல் விழிப்புநிலைக் குறியீடு (டோர்ஸ்கான்) ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா கிருமித்தொற்றால் பொதுச் சுகாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மிதமானது முதல் அதிகமான அளவு வரை இருக்கக்கூடும் என்பதை ஆரஞ்சு விழிப்புநிலை குறிப்பிடுகிறது.

ஆரஞ்சு விழிப்புநிலையின்படி, கிருமித்தொற்று சமூகத்தில் மேலும் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காக புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மார்ச் மாத விடுமுறைக்காலம் வரை பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கைகளும் பள்ளிகளுக்கு இடையிலான நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும். தொழில்ரீதியான அவசரகாலத் திட்டங்களை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும். மருத்துவமனைகளில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்.

மக்கள் அதிகம் கூடும் அவசியமில்லாத நிகழ்ச்சிகளை ரத்து செய்ய அல்லது தள்ளிப்போட பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவேளை, அத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். இருமல் அல்லது சளி இருப்பவர்களை அடையாளம் காணவும் உடல்நலம் குன்றியோருக்கு அனுமதி மறுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடம் காற்றோட்டமாகவும் கைகளைக் கழுவ போதிய வசதிகளும் இருக்கவேண்டும். முடிந்தால், பங்கேற்பாளர்களின் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.

14 நாள் கட்டாய விடுப்பில் இருப்பவர்கள் அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது.

நாள்தோறும் குறைந்தது இருமுறையேனும் ஊழியர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க நிறுவனங்கள் வலியுறுத்தப்படுகின்றன. உடல் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்கும் ஊழியர்கள் பணியிடத்தில் இருக்கக்கூடாது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருப்போரைத் தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளில் கட்டாய பரிசோதனை என, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

#தமிழ்முரசு #கொரோனா #நொவெல் கொரோனா கிருமித்தொற்று

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!