ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆடவர்

போதையில் இருந்த ஆண் பயணி ஒருவர், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த அவலம் ஏர் இந்தியா விமானத்தில் நிகழ்ந்தது.

எழுபது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் பயணி, நியூயார்க்கில் இருந்து புதுடெல்லி சென்ற விமானத்தில் வர்த்தகப் பிரிவு (பிஸ்னஸ் கிளாஸ்) இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு இந்த அவலம் நேர்ந்தது.

விமானச் சிப்பந்திகளிடம் இதுகுறித்து அந்த மாது தெரியப்படுத்தினார். ஆனால் அந்த ஆடவரைத் தடுத்து நிறுத்த அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று அந்த மாது கூறினார்.

விமானம் தரையிறங்கிய பின்னர் அந்த ஆடவர் எதுவுமே நடக்காததுபோல் இறங்கிச் சென்றுவிட்டதாக அந்த மாது சொன்னார்.

டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு அந்த மாது கடிதம் அனுப்பிய பிறகே இதுகுறித்த விசாரணையை ஏர் இந்தியா  தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 26ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

"விமானத்தில் உணவு பரிமாறப்பட்டு அதைப் பயணிகள் சாப்பிட்ட பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டன. அப்போது என் இருக்கைக்கு வந்த பயணி ஒருவர், அருவருப்பை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டார்.

"கால்சட்டையை அவிழ்த்த அவர், என் மீது சிறுநீர் கழித்துவிட்டார். அவரது அந்தரங்க பகுதிகளைத் தொடர்ந்து காட்டினார், என்று அந்த மாது கடிதத்தில் குறிப்பிட்டார்.

சிறுநீர் கழித்த பிறகு, அந்த ஆடவர் தொடர்ந்து அங்கு நின்றார். வேறொரு பயணி அவரை அங்கிருந்து போகச் சொன்ன பிறகே அவர் நகர்ந்தார்.

அவர் அங்கிருந்து சென்றவுடன் அந்த மாது உடனடியாக விமானச் சிப்பந்தியிடம் தெரியப்படுத்தினார்.

"எனது இரவு உடுப்பு, காலணிகள், கைப்பை அனைத்திலும் சிறுநீர் பட்டுவிட்டது. விமானச் சிப்பந்தி என் இருக்கைக்கு வந்து, அங்கு சிறுநீர் வாடை வீசுகிறதா என்பதை உறுதிப்படுத்தினார். பின்னர் என் கைப்பை, காலணிகள் மீது கிருமி நாசினியைத் தெளித்தனர்," என்று அந்த மாது குறிப்பிட்டார்.

விமானத்தின் கழிவறையில் அந்த மாது தம்மை துப்புரவுப்படுத்திக்கொண்ட பிறகு, மாற்றிக்கொள்வதற்காக வேறொரு துணிமணியையும் செருப்புகளையும் விமானச் சிப்பந்திகள் வழங்கினர்.

அசுத்தமான தம் இருக்கைக்குத் திரும்ப விரும்பாததால், கழிவறை ஓரமாக சுமார் 20 நிமிடங்களுக்கு அந்த மாது நின்றார். விமானச் சிப்பந்திகள் அமர்வதற்கான ஒடுக்கமான இருக்கையில் அவர் அமர வைக்கப்பட்டார். அங்கு ஒரு மணி நேரம் அமர்ந்திருந்த அவர், பின்னர் தம் இருக்கைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டார்.

"இருக்கையின் மீது விமானப் பணியாளர்கள் பிளாஸ்டிக் தாள் வைத்தாலும், அந்தப் பகுதியில் சிறுநீர் வாடை வீசியது," என்றார் அந்த மாது.

இரண்டு மணி நேரம் கழித்து, விமானச் சிப்பந்திகள் அமருவதற்கான வேறோர் இருக்கையில் அவர் அமர வைக்கப்பட்டார். முதலாம் வகுப்பில் (ஃபர்ஸ்ட் கிளாஸ்) பல இருக்கைகள் காலியாக இருந்ததை வேறொரு பயணியிடமிருந்து அந்த மாது பின்னர் அறிந்தார்.

"மன சங்கடத்திற்கு ஆளான பயணியைப் பார்த்துக்கொள்வது முக்கியம் என்பதை விமானப் பணியாளர்கள் உணரவே இல்லை. டெல்லி விமான நிலையத்தில் சுங்க நடைமுறைகளை நான் விரைவாக முடிப்பதை உறுதிசெய்ய, எனக்கு சக்கர நாற்காலியைப் பெற்றுத் தருவதாக பயணத்தின் இறுதியில் விமானப் பணியாளர்கள் கூறினர்.

"ஆனால், விமான நிலையத்திற்கு வந்ததும் அரை மணி நேரமாக நான் சக்கர நாற்காலியில் காத்திருந்தேன். என்னைத் தள்ளிச்செல்ல எவரும் வரவில்லை.

"பின்னர் நான் சொந்தமாகவே சுங்க நடைமுறைகளை நிறைவேற்றி, என் பயணப்பெட்டிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று -  எல்லாம் ஏர் இந்தியாவின் இரவு உடுப்பிலும் காலுறையிலும்," என்று அந்த மாது கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "விமானச் சிப்பந்திகள் நிறுவன நடைமுறைகளைப் பின்பற்றி, விமானிக்கு தெரியப்படுத்தி, முறைகேடாக நடந்துகொண்ட அந்த ஆண் பயணியை விமான நிலையம் வந்திறங்கியதும் பாதுகாவல் அதிகாரியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்," என்றார்.

ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், "இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் ஏர் இந்தியா தெரியப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பயணியுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்," என்று கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!