பேரருள் வேண்டும் பக்தகோடிகள்

எஸ்.விக்னேஸ்வரி

தலைமுறை தலைமுறையாக சிங்கப்பூர் இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக திகழ்ந்து வருகிறது சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில். 

1827ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இக்கோயில் சிங்கப்பூரின் ஆகப் பழைமையான இந்துக் கோயில். 13 ஆண்டுகளுக்குப் பின்னர், இக்கோயிலுக்கு நாளை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. 

காலப்போக்கில் இடம்பெற்ற மாற்றங்கள், இக்கோயிலில் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுவந்துள்ளன. 

கோயிலின் ஐந்து அடுக்குக் கோபுரம், திரௌபதி அம்மன் சன்னதி, கோவிலை இருபுறமும் அலங்கரிக்கும் தூண்கள் போன்றவை நம்மில் பெரும்பாலோர் சிறுவயதிலிருந்து பார்த்து இன்றுவரை ரசிக்கும் சிறப்பு அம்சங்களாகும்.

இம்முறை கோயிலிலுள்ள சில சன்னதிகள் மாற்றம் பெற்றுள்ளன. குறிப்பாக, ஸ்ரீ மாரியம்மன் கருவறையில் செய்யப்பட்ட மாற்றம் பக்தர்களுக்குக் கடந்த காலத்தை நினைவுபடுத்தும். 

“ஸ்ரீ மாரியம்மன் கருவறையில் இருந்த மின்சார விளக்குகள் அகற்றப்பட்டுவிட்டன. அவற்றுக்குப் பதிலாக அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு,

அம்மனின் திருவுருவம் அகல் விளக்கு வெளிச்சத்தில் ஒளிரும். இம்மாற்றம், தாயின் கருவறையில் இருப்பது போன்ற உணர்வைத் தரும்.

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான ஆலயங்களில் இப்பழக்கம் பின்பற்றப்படுகிறது,” என்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தலைவர் திரு எஸ். லட்சுமணன் விவரித்தார். 

மறுசீரமைப்புப் பணிக்குழு

இந்தியாவைச் சேர்ந்த தலைமைச் சிற்பக் கலைஞர் டாக்டர் கே. தட்சிணாமூர்த்தியின் வழிகாட்டுதலில் கடந்த ஓராண்டு காலமாக புதுப்பிப்புப் பணிகள் இடம்பெற்று வந்தன. 

இவர் தமிழ்நாட்டின் இந்து சமய மற்றும் அறநிலைக் கட்டளை அமைப்பின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ஆம் ஆண்டு இக்கோயிலில் இடம்பெற்ற புதுப்பிப்புப் பணிகளையும் அவரே வழிநடத்தினார். 

அவருடைய தலைமைத்துவத்தின்கீழ் 12 சிற்பக் கலைஞர்கள், ஏழு தச்சு, உலோக நிபுணர்கள், ஓவியர்கள் ஆகியோர் பணியாற்றினர். இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களோடு உள்ளூர் நிபுணர்கள் பலரும் பணியாற்றினர்.

இம்முறை விரிவான அளவில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்குத் தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுத்தது. 

“கோபுரம், விமானங்களின் நிலையைக் கண்காணிப்பதற்கு ஆளில்லா வானூர்தி பயன்படுத்தப்பட்டது. 

“பல ஆண்டுகளாக பழைய வண்ணங்களின் மேலேயே வண்ணம் பூசப்பட்டு வந்தது. இம்முறை வண்ணத்தை முழுமையாகச் சுரண்டப்பட்டு, பழுதுபார்க்கப்பட்டு, அதன்பிறகு வண்ணம் பூசப்பட்டது,” என்று விளக்கினார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கட்டட, மறுசீரமைப்புக் குழுவின் துணைத் தலைவர் என்.ஆர். சங்கர்.

தேசிய நினைவுச் சின்னம்

1973ஆம் ஆண்டில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. அதனால், கோயிலின் பழைமை மாறாமல் பாதுகாக்கப்படுவது முக்கியம். 

எனவே, தேசிய மரபுடைமைக் கழகத்தின் நினைவுச் சின்னப் பாதுகாப்பு வாரியத்தின் வழிகாட்டுதலின்கீழ் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. 

“புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது இரண்டு முக்கிய அம்சங்களை நாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியிருந்தது. 

“முதலாவதாக, இக்கோயில் தேசிய நினைவுச் சின்னம் என்பதால் புது அம்சங்களை மறுசீரமைப்புப் பணிகளின்போது புகுத்தக்கூடாது. புதுப்பொலிவு கொடுக்க முடியுமே தவிர, புதிய சிலைகள், வடிவங்கள் ஆகியவற்றை அமைக்க முடியாது என்பது இரண்டாவது அம்சம். இந்து சமய வழிகாட்டுதலின்படி கோயில் புதுப்பிக்கப்படவேண்டும் என்பது மற்றொரு முக்கியமான அம்சம்,” என்றார் திரு சங்கர்.

தமிழ் இந்துக்களின் அடையாளம்

1936ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயிலின் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பின் 1949, 1971, 1984, 1996, 2010 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்கு நடந்தேறியது. கொவிட்-19 கிருமிப் பரவலால் சென்ற ஆண்டு இடம்பெறவிருந்த குடமுழுக்கு இந்த ஆண்டிற்குத் தள்ளிப்போடப்பட்டது. 

கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக சிங்கப்பூர்த் தமிழர்களின் சமய, சமூகத் தேவைகளை ஸ்ரீ மாரியம்மன் கோயில் பூர்த்தி செய்து வருகிறது. 

பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்து பக்தர்களின் நம்பிக்கைகள் மற்றும் கலாசாரத்தின் முக்கிய அடையாளமாக ஸ்ரீ மாரியம்மன் கோயில் வீற்றிருக்கிறது.

யூடியூபில் நேரலையாக ஒளிபரப்பு

குடமுழுக்கு விழாவை யூடியூபில் நேரலையாகக் காணலாம். இணைப்பு: https://www.youtube.com/live/txK97lnjRHw?feature=share

vicneswarys@sph.com.sg
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!