மலேசியா: முகாம்களில் 50,500 பேர் தஞ்சம்

2 mins read
bea100ac-d636-44a6-b8a3-994d3a94097b
நெகிரி செம்பிலானில் அமைக்கப்பட்டு இருந்த முகாம்கள், வெள்ளநீர் வடிந்ததை அடுத்து மூடப்பட்டதாகவும் அதில் இருந்தவர்கள் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. படம்: பெர்னாமா -

மலேசியாவில் தொடர் மழை, வெள்ளம் காரணமாக மூன்று மாநிலங்களில் 50,000க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மலேசியாவில் கடந்த பல நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆறுகள் உடைந்து தண்ணீர் கிராமங்களில் புகுந்துவிட்டது. வீடுகள், சாலைகள், வாகனங்கள் மூழ்கிக் கிடக்கின்றன. நால்வர் மரணமடைந்தனர்.

ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் விழிப்பாக இருந்து வரவேண்டும் என்று தீயணைப்பு மீட்புத் துறை ஆலோசனை கூறி இருக்கிறது.

ஜோகூர், பாகாங், சரவாக்கின் சில பகுதிகளில் திங்கட்கிழமை (மார்ச் 6) வரை மழை தொடரும் என்றும் ஜோகூர், பாகாங், கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட பல மாநிலங்களில் அலை ஏற்றம் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு நிலையம் முன்னுரைத்துள்ளது.

ஜோகூர், மலாக்கா, பாகாங் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களில் சுமார் 50,500 பேர் தங்கியுள்ளனர்.

நெகிரி செம்பிலானில் அமைக்கப்பட்டு இருந்த முகாம்கள், மழைநீர் வடிந்ததை அடுத்து மூடப்பட்டதாகவும் அதில் இருந்தவர்கள் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜோகூர் மாநிலத்தில் ஏறக்குறைய 47,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேலும் நிவாரண முகாம்களை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜோகூரின் சிகாமட் மாவட்டத்திற்கு வருகையளித்தார்.

மலேசியாவில் வெள்ள நிலவரம் மேம்படுவதற்கான அறிகுறிகள் தெரிவதால் அவசரநிலை அறிவிக்க வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்று பிரதமர் தெரிவித்தார்.

பல இடங்களில் மழைநீர் வடிவதாகவும் சில இடங்களில் தேங்கி இருக்கும் மழைநீர் வடிய காலம் எடுக்கும் என்றும் அவர் கூறினார். சிகாமட்டில் தற்காலிக முகாம் ஒன்றைப் பிரதமர் பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

நாட்டில் 600 மில்லியன் ரிங்கிட் (S$180.32 மில்லியன்) மதிப்புள்ள வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், பகிரங்க ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் விரைவாக அங்கீகரிக்கப்பட்டு திட்டப் பணிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் கானி, அரசு நிலைக்குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகக் கூறினார். வெள்ளம் காரணமாக டெங்கி போன்ற நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் சூழ்நிலையைத் தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளநீர் ஓடும் சாலைகளில் நீரோட்டம் வலுவாக இருப்பதால் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியவில்லை என்ற பிரதமர் துறை அமைச்சர் முகம்மது அலி, என்றாலும் தீயணைப்பு மீட்புத் துறை, குடிமைத் தற்காப்புப் படை, ஆயுதப் படைகள் உதவுவதாகக் கூறினார்.