லிட்டில் இந்தியா வட்டாரத்தில் தாய், மகன் மரணம்

லிட்டில் இந்தியாவில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் கீழே இன்று காலையில் 54 வயது ஆடவர் ஒருவர் மாண்டு கிடக்கக் காணப்பட்டார். வீராசாமி சாலை, புளோக் 637ன் 11ஆம் தளத்தில் உள்ள அவரது வீட்டில் அவரின் 82 வயது தாயும் இறந்து கிடந்ததை காவல்துறையினர் பின்பு கண்டறிந்தனர்.

சம்பவம் குறித்துக் காலை 7 மணியளவில் தகவல் கிடைத்ததாகப் போலிஸ் தெரிவித்தது., இந்த இரட்டை மரணங்களை இயற்கைக்கு மாறானது என வகைப்படுத்தி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தாயும் மகனும் உயிரிழந்துவிட்டதைச் சம்பவ இடத்திலேயே துணை மருத்துவப் படையினர் உறுதிசெய்தனர்.

கடந்த 40 ஆண்டுகளாக அந்த ஆடவர் அந்த வீட்டில் வசித்து வந்ததாகப் பெயர் கூற விரும்பாத அண்டை வீட்டுக்காரர் ஒருவர் சொன்னார். அந்த ஆடவரின் தந்தை பத்து ஆண்டுகளுக்குமுன் இறந்துவிட்டதாகவும் அதன்பின் தம் தாயாருடன் அவர் வசித்து வந்ததாகவும் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற அந்த 60 வயது அண்டை வீட்டுக்காரர் கூறினார்.

படம்: சாவ்பாவ்
படம்: சாவ்பாவ்

"அவர் தம் தாயாரை மிகவும் நேசித்தார். தம் தாயாரை மருத்துவரிடம் அழைத்துச் செல்வார். அன்றாடம் வெளியில் சென்று அவருக்கு உணவு வாங்கி வருவார்," என்றார் அந்த அண்டை வீட்டுக்காரர்.

கடைசியாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்த ஆடவருடன் தாம் பேசியதாக அவர் சொன்னார். இல்ல மேம்பாட்டுத் திட்டம் பற்றி அவர்கள் விவாதித்துள்ளனர். அவர்கள் இருவரது வீடுகளிலும் புதுப்பிப்புப் பணிகள் நாளைத் தொடங்குவதாக இருந்தது.
அந்தக் குடும்பத்தில் பணப் பிரச்சினை இருந்ததாகக் குறிப்பிட்ட அந்த அண்டை வீட்டுக்காரர், தந்தை இறந்தபின் முழு நேரமும் தாயாரைக் கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதால் வேலைக்குச் செல்ல முடிவதில்லை என்று அந்த ஆடவர் தம்மிடம் சொன்னதாகவும் அவர் கூறினார். முன்னதாக, பண்டகசாலை ஒன்றில் அவர் வேலை செய்தார்.

அந்தக் குடும்பத்தில் அந்த ஆடவரே ஆக இளையவர் என்றும் அவருக்கு அண்ணன் ஒருவரும் சகோதரிகள் இருவரும் இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் சகோதரிகள் இருவரும் ஆண்டிற்கு ஒருமுறை வந்து செல்வார்களாம். கடந்த பத்து ஆண்டுகளில் தம்முடைய தாயாரின் மருத்துவச் செலவிற்காக அந்த ஆடவர் பலமுறை தம்மிடம் கடன் வாங்கியதாக அந்த அண்டை வீட்டுக்காரர் கூறினார்.

"ஒவ்வொரு முறையும் அந்த ஆடவர் $50 அல்லது $100 கடன் வாங்குவார். ஆயினும், ஆறு மாதங்களுக்குள் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவார்," என்று அவர் நினைவுகூர்ந்தார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து அந்த ஆடவரின் தாயார் சக்கர நாற்காலியில் முடங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே புளோக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் திரு ரவி (உண்மைப் பெயர் அல்ல), இறந்து போனவர்கள் குஜராத்திக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். 

இருப்பினும், இறந்துபோன அந்த மூதாட்டி, தமிழ், இந்தி, உருது ஆகிய மொழிகளில் பேசக்கூடியவர் என அவர் சொன்னார்.
"என் அம்மா காலமாவதற்குமுன் அந்த ஆடவரின் தாயாருடன் அடிக்கடி பேசுவார். அவர்கள் இருவரும் தமிழில்தான் உரையாடுவார்கள்.
"அவரது மகனை  மின்தூக்கியில், புளோக்கின் கீழே என அவ்வப்போது பார்ப்பேன். அவரும் என்னைப்போலக் லிவர்பூல் காற்பந்தாட்டக் குழு ரசிகர் என்பதால் பெரும்பாலும் அதைப் பற்றியே பேசுவோம்," என்ற திரு ரவி, கடைசியாகக் கடந்த சனிக்கிழமை அவரைப் பார்த்ததாகச் சொன்னார்.
எல்லாரிடமும் நன்குப் பழகக்கூடிய தாயும் மகனும் இப்படி மர்மமான முறையில் இறந்துபோனது தமக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது என்றும் அவர் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மாநாட்டிற்கு வந்திருந்தோரிடம் உரையாடினார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன். நடுவில் தெற்காசிய ஆய்வுக் கழகத் தலைவர் கோபிநாத் பிள்ளை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

புலம்பெயர் சமூகத்துக்கு மூன்று யோசனைகள்

(இடமிருந்து) தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் தலைவர்
கோபிநாத் பிள்ளை, மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்,
திரு ஜே.ஒய். பிள்ளை, திரு மன்சூர் ஹசான், என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய். படம்: தெற்காசிய ஆய்வுக் கழகம்

17 Nov 2019

ஜே.ஒய். பிள்ளைக்கு சிறப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது

முதல் தளத்திலிருந்து, பிரிக்கும் பலகை வழியாக ‘கீழ்த்தளம் ஒன்றில் (Basement 1)’ அவர் விழுந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

16 Nov 2019

ஷா பிளாசா: வேலையிடத்தில் தவறி விழுந்து இந்திய ஊழியர் மரணம்