தேசிய தின அணிவகுப்பு- பார்வையாளர் கருத்து

சிங்கப்பூரின் 54ஆவது தேசிய தின அணிவகுப்பைக் காண பாடாங்கிற்கு இன்று மாலை திரண்டிருந்த சுமார் 27,000 பேரில் சிலரைத் தமிழ் முரசு சந்தித்தது:

முதன்முறையாக தேசிய அணிவகுப்பைத் தமது மகனுடன் காண வந்த திருமதி ஷகிலா சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட முன்னோடிகளின் உழைப்பைப் பற்றி தெரிந்துகொள்ள அந்த அணிவகுப்பு வழிவகுத்ததாகக் கூறினார்.

“இருநூற்றாண்டு நிறைவை ஒட்டி நடைபெறும் இக்கொண்டாட்டத்தை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். சிங்கப்பூரர்களுக்கு இடையிலான ஒற்றுமையை இது ஊக்குவிக்கிறது,” என்றார் 45 வயது ஷகிலா. அவருடன் அவரது மகன் 18 வயது ஷாஹித்துடம் அணிவகுப்பைக் காண வந்திருந்தார்.

சிங்கப்பூர் ஆகாயப்படையைச் சேர்ந்த போர்விமானங்களின் சாகசக் காட்சியை நேரடியாகக் காண்பதற்காகவே இவ்வாண்டின் அணிவகுப்பிற்குத் தமது வருங்கால மனைவி ஜென்னிஃபருடன் வந்திருந்தார் 29 வயது திரு சதீஷ் குமார்.

“10 ஆண்டுகளுக்கு முன்னதாக நான் தேசிய தின அணிவகுப்பிற்கு வந்திருந்தேன். காலப்போக்கில் தேசிய தின அணிவகுப்புகளில் இடம்பெறும் நடனங்கள், ஒளிக் காட்சிகள் ஆகியவற்றின் தரம் வெகுவாக உயர்ந்துள்ளன. நம் நாட்டின் சுதந்திரத்தையும் சாதனைகளையும் நினைவுகொள்ள இது சிறந்த தருணம். உலக வரைபடத்தில் நாம் ஒரு சிறு புள்ளியாக இருந்தாலும் மற்ற நாடுகள் நம்மைத் தலைநிமிர்ந்து பார்க்கின்றன. அதனால் நாம் நன்றியுணர்வுடனும் நாட்டுப்பற்றுடனும் இருக்கவேண்டும். விரைவில் நானும் ஒரு குடும்பத்தைத் தொடங்கவிருப்பதால் ஒவ்வோர் ஆண்டும் அணிவகுப்பைப் பார்ப்பதை வழக்கப்படுத்திக்கொள்ளப் போகிறேன்,” என்றார் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பணியாற்றும் திரு சதீஷ்.

தமது குடும்பத்தாருடன் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பைக் காண வந்திருந்தார் 34 வயது திருமதி விகக்னேஷ்வரி.

“என் கணவர், பிள்ளைகள், மாமியார் அனைவருடனும் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பைக் காண முடிந்ததால் எங்களுக்கு இது மிகச் சிறப்பான அனுபவமாய் அமைந்துள்ளது. என் குடும்பத்தாருடனும் சக சிங்கப்பூரர்களுடனும் ஒன்றிணைந்து நாட்டின் பிறந்தநாளைக் கொண்டாடுவதில் பெருமையடைகிறேன்.”

திருவாட்டி தனம் பாக்கியம்,61, இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பைப் பற்றித் தெரிவிக்கையில், "வழக்கமாக தொலைக்காட்சியில்தான் தேசிய தின அணிவகுப்பைப் பார்ப்பேன். இம்முறை முதன்முறையாக என் மகள், பேரப்பிள்ளைகள் ஆகியோருடன் நேரடியாக அணிவகுப்பைக் காண வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இளையர்களின் இதயங்களில் இன நல்லிணக்கத்தையும் நாட்டுப்பற்றையும் விதைப்பது மிகவும் முக்கியம். அத்தகைய உணர்வுகளைத் தூண்டுவதற்கு தேசிய தின அணிவகுப்பு மிகச் சிறந்த வாய்ப்பாக அமைகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு எங்களைப்போன்ற மூத்த தலைமுறையினர் பட்ட சிரமங்களை இக்காலத் தலைமுறையினரும் புரிந்துகொள்வது அவசியம்," என்றார்.

தமது இளம் வயதில் ஏற்கெனவே மூன்று முறை தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்ற 55 வயது திருமதி சாந்தி முத்துராஜா இவ்வாண்டு இரண்டாம் முறையாக அணிவகுப்பின் பார்வையாளராகச் சென்றிருக்கிறார்.

"பழைய நினைவுகளை நினைவுட்டும் காணொளிகளும் இதர கலைநிகழ்ச்சி அம்சங்களும் அணிவகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தவை. தற்போது இருக்கும் நவீன தொழில்நுட்பத்தால் சிங்கப்பூரர்களுக்கு வாழ்வு எளிமையாகியுள்ளது. ஆனால் மூத்த தலைமுறையினர் அனுபவித்த சவால்களை இளைய தலைமுறையினர் மறந்துவிடக்கூடாது. இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பைப் பார்க்க நன்றிகடன் பட்டுள்ளேன்," என்றார் திருமதி சாந்தி முத்துராஜா, 55.

சிங்கப்பூரின் ஆரம்ப காலத்தில் பாடாங் சாலையின் ஓரத்தில் நின்று தேசிய தின அணிவகுப்பைக் கண்ட திருவாட்டி சிவபாக்கியம் இக்காலத்தில் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

"அந்தக் காலத்தில் தேசிய அணிவகுப்பைக் காண்பதற்கான வசதிகள் அவ்வளவாக அமைக்கப்படவில்லை. இப்போது சிங்கப்பூரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குப் பல்வேறு பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாம் அனைவரும் அதற்கு வரவேற்பு அளித்து நமது நாட்டுப்பற்றை வளர்த்துகொள்ளவேண்டும். முற்காலத்தில் சிறு மீன்பிடி கிராமமாக இருந்த நாம், பல துறைகளில் முன்னேற்றம் கண்டு வெற்றியடைந்தைப் பற்றி இவ்வாண்டின் கொண்டாட்டம் நினைவூட்ட உதவியது," என்றார் 75 வயது திருவாட்டி சிவபாக்கியம்.

இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமது மகளுடன் தேசிய தின அணிவகுப்பைக் காண வரும் திருமதி லீலா,55, இவ்வாண்டின் கொண்டாட்டத்தில் உற்சாகத்துடன் பார்வையிட்டார்.

“ தேசிய தின அணிவகுப்பின்போது அதிபரை நேரடியாகப் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த முறை இருநூற்றாண்டு நிறைவு மிகவும் சிறப்பாகவும் நினைவில் நிற்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக நடனங்களும் வாணவேடிக்கைகளும் படு அமர்க்களம்,’ என்றார் தமது 22 வயது மகள் பிரேமதுர்காவுடன் வந்திருந்த திருமதி லீலா.

தமது தம்பி 35 வயது குணசீலனுடன் கிட்டதட்ட 10 முறைகள் தேசிய தினத்தைக் காண வந்துள்ளார் திரு சுரேஷ் வனாஸ், 40.

"பாடாங்கில் நடக்கும் அணிவகுப்பு என் சிறு வயது நினைவுகளைத் தூண்டுகிறது. இந்த ஆண்டின் அனுபவம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக உள்ளது. மூத்த தலைமுறையினரின் மனதிற்கு நெருக்கமான படைப்பாக இவ்வாண்டின் அணிவகுப்பு அமைந்துள்ளது. என் தம்பி வானவேடிக்கைகள், வண்ண விளக்குகள் போன்றவற்றைப் பார்த்து பூரித்து போய் இருக்கிறார்," என்றார் பல ஆண்டுகளாக தேசிய தின அணிவகுப்பில் நடனக் கலைஞராகப் பங்கேற்ற திரு சுரேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!