நமது சிங்கப்பூர்; நமது கொண்டாட்டம்

இருநூற்றாண்டு நிறைவையொட்டி சிங்கப்பூரின் 54வது தேசிய தினக் கொண்டாட்டம் நேற்று பாடாங்கில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கிட்டத்தட்ட 27,000 பேர் அதனை நேரடியாகக் கண்டு களித்தனர். இவ்வாண்டின் தேசிய தினக் கருப்பொருளுக்கு ஏற்ப அரங்கம் முழுவதிலும் ‘நமது சிங்கப்பூர்‘ உணர்வு மேலோங்கியிருந்தது. வண்ணமயமான விளக்குகள், காதுகளைப் பிளக்கும் ஆகாயப்

படையின் சாகசங்கள்,  கண்ணைக் கவரும் வாணவேடிக்கைகள், மகிழ்வூட்டும் நடனங்கள் முதலியவற்றோடு ஒரு நாடாக நாம் கடந்து வந்த பாதையை நினைவுகூரும் வகையில் அங்கங்கள் வந்திருந்தோரின் மனங்களைக் கவர்ந்தன. 

சிங்கப்பூரின் ஆகப் பழமையான நாளேடான ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, சிங்கப்பூர் அஞ்சல்துறை, சிங்கப்பூர் துறைமுக ஆணையத்திற்கு முன் செயல்பட்ட தஞ்சோங் பகார் துறைமுக நிறுவனம் உட்பட எட்டு அமைப்புகள் மிதவைகளில் வலம் வந்து வரலாற்று நினைவலைகளை தட்டி எழுப்பின.   மாலை 3.30 மணிக்கே சிவப்பு, வெள்ளை உடைகளில் வெள்ளமெனத் திரளத் தொடங்கிய மக்கள், பாடாங் அரங்கிற்கு உற்சாகம் ஊட்டினர்.

சிறப்புப் பாதுகாப்புப் பகுதியாக பாடாங்கைச் சுற்றிய பகுதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பலத்த பாதுகாப்புச் சோதனைகளுக்கிடையே பொறுமையாக மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட வந்தனர். 

சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவையொட்டி நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பிற்கு அண்டை நாட்டுத் தலைவர்கள் வருகையளித்து சிறப்பித்தனர். மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, புருணை சுல்தான் ஹசனல் போல்கியா ஆகியோர் தங்களின் துணைவியாருடன் கலந்துகொண்டது இவ்வாண்டு தேசிய தினத்தின் சிறப்பு. 

மாலை 6.40  மணியளவில் அரங்கினுள் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் கார் வந்தவுடன் மக்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.  கடைசியாக சிங்கப்பூரின் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு அலங்கரிக்கப்பட்ட பாடாங், இவ்வாண்டு இருநூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பிரம்மாண்ட அளவில் அண்மையில் நினைவுச் சின்னமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் நடைபெற்றது. 

சிங்கப்பூரின் முதல் தேசிய தினக் கொண்டாட்டம் 1966ஆம் ஆண்டு பாடாங்கில் நடைபெற்றது. கடந்த 1995ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடாங் அரங்கில் தேசிய தின அணிவகுப்பு நடைபெற்றுவருகிறது. 

 

ஐந்தரை மணி முதல் வந்திருந்தோரை மகிழ்விக்கும் வண்ணம் நடனங்களும் பாடல்களும் இடம்பெற்றன. வெள்ளை மேடையில் வண்ணமயமான உடைகளில் நடனமணிகள் இடத்தை அலங்கரித்தனர். 

ஆறு மணிக்கு நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரங்கிற்கு வந்தனர். சுமார் 15 நிமிடத்தில் துணை அமைச்சர்களும் மூத்த துணை அமைச்சர்களும் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள், துணைப் பிரதமர் வரவேற்கப்பட்டனர். அதன் பின்னர் போக்குவரத்து போலிஸ் மோட்டார் சைக்கிள்களில் புடைசூழ்ந்து வர, பிரதமர் லீ சியன் லூங்கின் கார் அரங்கிற்கு வந்தது. அப்போது மக்கள் உற்சாகத்துடன் குரலெழுப்பி வரவேற்றனர். 

சிங்கப்பூரின் பெருமையை பறைசாற்றும் உலோகச் சிங்கமும் அணிவகுப்பில் இடம்பெற்றது. ஆறு மீட்டர் உயரத்திலான அந்த சிங்கத்தின் எடை சுமார் ஆயிரம் கிலோ. ஆண்டுதோறும் பார்வையாளர்களுக்குப் பிடித்தமான அங்கங்களில் ஒன்றான ஆகாயப் படையின் சாகசங்கள் இவ்வாண்டும் கண்களுக்கு விருந்தளித்தன. 

வானத்தில் 10,000 அடி உயரத்திலிருந்து வான்குடை சாகசங்கள் நிகழ்த்தினர் ஆகாயப் படையின் ‘ரெட்லயன்ஸ்’ வீரர்கள். திரண்டிருந்த மக்கள் தலைகளை உயர்த்தி வானத்தை நோக்கி வீரர்களைப் பார்த்தவண்ணம் இருந்தனர். 

ஒவ்வொரு வீரரும் வந்திறங்கும்போது மக்கள் குரலெழுப்பி உற்சாகமூட்டினர். 50 வயது மாஸ்டர் சார்ஜண்ட் ராஜேந்திரன் சுப்ரமணியம் சாகச வீரர்களில் ஒருவர். இதுவரை பற்பல தருணங்களில் 750 முறை வான்குடை சாகசங்கள் நிகழ்த்திய பெருமைக்குரியவர் அவர்.

முப்படைகளின் அணிவகுப்பு அரங்கத்தை அலங்கரிக்க அதில் இவ்வாண்டு மெர்டேக்கா தலைமுறையினரும் அணிவகுத்து வந்தது சிறப்பம்சமாக இருந்தது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணும் இடமெல்லாம் குடையாகக் காட்சியளித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம். படம்: ராய்ட்டர்ஸ்

18 Aug 2019

ஹாங்காங்கில் போட்டி ஆர்ப்பாட்டங்கள்; ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர்

‘பிக் & கோ’ தானியங்கி சில்லறை வர்த்தகக் கடையில் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதை அமைச்சர் சான் சுன் சிங்குக்கு (வலது) அந்த நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸ் இங் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Aug 2019

தானியங்கி சில்லறை விற்பனைக் கடைகள்

திருமதி புவா ஜியோக்கின் சடலம் இன்று காலை அவரது மகனால் உறுதிசெய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Aug 2019

துடுப்பு விபத்து: பெண்ணின் சடலம் உறுதி செய்யப்பட்டது