அமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் நீடித்தால் சிங்கப்பூருக்கு நேரக்கூடிய பாதிப்புகள்

கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்காவும் சீனாவும் ஒன்றன்மீது ஒன்று மாற்றிமாற்றி விதித்துவரும் வர்த்தகத் தீர்வைகள் முழு அளவிலான வர்த்தகப் பூசலுக்கு இட்டுச்சென்றுள்ளன. ஆகக் கடைசியாக, செப்டம்பர் 1 முதல் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன இறக்குமதிகளுக்குக் கூடுதலாக 10 விழுக்காடு தீர்வை விதிக்கப்போவதாக வாஷிங்டன் இம்மாதம் எச்சரித்தது. அதன்பிறகு, அந்த மிரட்டலிலிருந்து பின்வாங்கியது. 

கடந்த செவ்வாய்க்கிழமை, கைபேசிகள், மடிகணினிகள், இதர பயனீட்டாளர் பொருட்கள் ஆகியவற்றின்மீதான தீர்வைகள் டிசம்பர் 15 வரை ஒத்திவைக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது. சிங்கப்பூர் இவ்வாண்டு முழுவதற்குமான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைக் குறைத்ததற்கு இந்தப் பூசலும் ஒரு காரணம். 

இந்நிலையில், இந்த வர்த்தகப் பூசல் நீடித்தால் இங்குள்ள பயனீட்டாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்? 

சில பொருட்களின் விலை உயரும், சிலவற்றின் விலை குறையும் 

உணவு பேரங்காடி. (கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)
உணவு பேரங்காடி. (கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

அமெரிக்காவும் சீனாவும் தங்களது பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்குப் புதிய சந்தைகளைத் தேடத் தொடக்கினால் சில பொருட்களின் விலைகள் குறையக்கூடும் என சிஐஎம்பி தனியார் வங்கியின் பொருளியலாளர் சொங் செங் வுன் கூறுகிறார்.  அமெரிக்காவும் சீனாவுக்கும் சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற சந்தைகளில் அதிகமாக விற்க முடிவெடுத்தால், விலைகள் குறையக்கூடும். 

அமெரிக்க பெர்ரி பழங்கள், சோயா விதைகள் போன்றவை இவற்றில் உள்ளடங்கக்கூடும். வர்த்தகப் பூசலின் மத்தியில், சீனாவுக்கு இவற்றின் ஏற்றுமதி குறைந்திருக்கிறது. அதே சமயத்தில், அமெரிக்காவுக்குப் பதிலாகத் தென்கிழக்காசியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய சீனா தீர்மானித்தால், அதிகரிக்கும் தேவையால் இங்கு விலைகள் உயரக்கூடும் என்கிறார் ஓசிபிசி வங்கியின் கருவூல ஆய்வு, உத்திப் பிரிவின் தலைவர் குமாரி செலினா லிங். 

வேலைச்சந்தை மெதுவடையும் 

வர்த்தகக் கொள்ளளவு குறைந்து, அமெரிக்காவிலும் சீனாவிலும் தேவை மந்தமடையும்போது, இந்தச் சந்தைகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் பாதிப்படையக்கூடும். இதனால், நிறுவனங்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை அமலாக்கக்கூடும். ஏற்கெனவே, பகுதி மின்கடத்தி தொழில்துறையிலுள்ள சில நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய முற்பட்டுள்ளன. மற்ற சில நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஆள்சேர்ப்பதை நிறுத்தி வைத்துள்ளன. 

சிங்கப்பூரில், உற்பத்தித் துறையே ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த தொழிலாளர் சந்தையும் பாதிப்படையலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

வட்டி விகிதம் சரிவு 

வர்த்தகப் பூசலால் வளர்ச்சி மெதுவடைந்து, அதனால் உலகெங்கிலும் வட்டி விகிதங்கள் குறைந்து வருவதாகச் சொல்கிறார் திரு சொங்.  அதிக வரவேற்புள்ள பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனம், இந்தச் சூழலில் கடன் வாங்கி விரிவடைவது எளிதாக இருக்கும் என்றார் அவர். 

பங்குச்சந்தையில் நிச்சயமின்மை

நீடித்த வர்த்தகப் பூசலால் பங்குச் சந்தைகள் தொடர்ந்து பாதிப்படையும். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 10 விழுக்காடு தீர்வையை அறிவுத்தவுடன், ஆகஸ்ட் 5ஆம் தேதி அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளும் வெகுவாகச் சரிந்தன. 

தீர்வை ஒத்திவைக்கப்படுவதாகச் செய்தி வெளியானவுடன், அமெரிக்கப் பங்குகளும் ஆசிய சந்தைகளும் மீண்டும் சற்று உயர்வுகண்ட போதிலும், அண்மை மாதங்களில் ஏற்பட்ட கணிசமான சரிவு இதுவரை ஈடுசெய்யப்படவில்லை.