‘அக்கறைக்குரியதாக நீடிக்கும் இனவாதம்’

எந்த ஒரு பல்லின சமுதாயத்திலும் இனவாதம் இருக்கும் என்றாலும் சிங்கப்பூரில் அது பெருமளவு குறைந்துள்ளதாகக் கூறியுள்ளார் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம். 

கொள்கை ஆய்வுக் கழகம் முன்பு வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பில் வேலையிடத்தில் இனப் பாகுபாடு இருக்கலாம் என்று கருதுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிய அமைச்சர், சிங்கப்பூரில் இனம், சமயம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சமூகத்தில் பிரிவுகள் உள்ளன என்றார். ஆகையால், அதைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு சிலர் தவறான நோக்கத்தில் இனவாதத்தைத் தூண்டலாம் என்று அவர் எச்சரித்தார். 

‘ப்ரீீத்திபிலிஸ்’ என்ற இயற்பெயரில் சர்ச்சைக்குரிய ‘ராப்’ காணொளி வெளியிட்ட ப்ரீத்தி நாயரும் அவரது சகோதரர் சுபாஷ் நாயரும் இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டதால் அவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டதையொட்டி அமைச்சர் சண்முகம் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். 

(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

இதையும் படிக்க: சண்முகம்: ‘ராப்’ காணொளி எல்லை மீறியது, ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தொடர்பு, புதிய ஊடகத் துறை நேற்று ஏற்பாடு செய்திருந்த தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டு மாணவர்களுடன் வெளிப்படையான கலந்துரையாடலில் திரு சண்முகம் பங்கேற்றார். 

இனவாதத்தைத் தூண்டும் வகையில் காணொளி இருந்ததால் அரசாங்கம் தலையிடவேண்டியிருந்தது என்றும் அது, குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினருக்குப் பயனளிக்கும் வகையில்தான் உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.

சட்ட திட்டங்கள் சரியாக இல்லையென்றால் சிறுபான்மையினருக்குப் பாதகமாக அது அமையும் என்று கூறிய அவர், சட்டம் இயற்றப்பட்டால் அது அனைத்து சமூகத்தினருக்கும் சமமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.  

“சிங்கப்பூரில் இனவாதம் குறைந்துள்ளது எதார்த்தமாக நடந்த ஒன்று அல்ல. அதற்குத்தக்க சட்டத் திட்டங்களும் கொள்கைகளும் செயல்பாட்டில் இருந்ததால்தான் இந்த நிலை உள்ளது,” என்று கூறினார் அமைச்சர்.

“கொள்கைகள் அடிப்படையில் இனவாதம் என்பது சிங்கப்பூரில் இல்லை. வீடமைப்புக் கொள்கைகளில் இன ஒருங்கிணைப்புக் கொள்கை, சிறுபான்மை உரிமைக்கான அதிபர் மன்றம், குழுத்தொகுதி, தேசிய சேவை போன்ற கொள்கைகளும் திட்டங்களும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை அளிக்க உதவுகின்றன,” என்றார் அவர். 

பல கருத்துக்கணிப்பு முடிவுகள், இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்களைப் பற்றிய குறிப்புகள் உட்பட முக்கிய தகவல்களை அமைச்சர் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். அதன் பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாகப் பதிலளித்தார். 

(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அரங்கத்தில் நேற்று நடந்தது. அப்பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கை ஆய்வுப் பள்ளியினுடைய கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர் சித்ரா ராஜாராம் வழிநடத்தினார்.

“இனவாதத்தைக் குறைக்க மக்கள் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடவேண்டும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்தது. பல்லின சமூகத்தில் வாழும் நாம் இன நல்லிணக்கத்தைத் தொடர்ந்து பேண இதுபோன்ற கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டும்,” என்று கூறினார் டாக்டர் சித்ரா. 

“அமைச்சரின் விரிவான கருத்துப் பரிமாற்றமும் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளும் கலந்துரையாடல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததற்குக் காரணம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.