தேவை அறிந்து தமிழ்த் திறன் வளர்க்கும் ஆசான்கள்

தமது ‘ஏ’ நிலைத் தேர்வுக்குப் பின் ஆறு மாதங்களுக்குத் தற்காலிக ஆசிரியராக வரலாறு, சமூகவியல் மற்றும் கணினி தொடர்பான பாடங்களைக் கற்பித்த குமாரி ஸேனாப் அப்துல் ரஹ்மான், மாணவர்களிடையே அவருக்கு ஏற்பட்ட பிணைப்பினாலும் கற்பித்தலின் மீதிருந்த ஈடுபாட்டினாலும் தேசிய கல்விக் கழகத்தில் கல்வித் துறைக்கான பட்டயக்கல்வியை மேற்கொண்டார்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்குத்தான் ஆசிரியராகப் போகிறோம் என்று எண்ணிய குமாரி ஸேனாப்புக்கு ஒரு திருப்பம் காத்திருந்தது.

தேசிய கல்விக் கழகத்தின் நேர்முகத் தேர்வில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிய விருப்பம் உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் சற்றும் யோசிக்கவில்லை. இந்திய சமூகத்தின் இளையர்களுக்கு நல்ல கல்வியையும் பண்பு நலன்களையும் ஊட்டுவதற்கு தமிழாசிரியர் பணிதான் உகந்தது என்று முடிவெடுத்து களம் இறங்கினார்.

ஈசூன் டவுன் உயர்நிலைப்பள்ளியில் தமது சேவையைத் தொடங்கிய அவர், உயர்தமிழ், விரைவு, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) ஆகிய நான்கு நிலைகளிலும் உள்ள மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்த ஓர் அனுபவசாலி.

சிங்கப்பூர் நிர்வாகக் கழகப் (சிம்) பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் இவர்.

தற்போது செயிண்ட் கேபிரியல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தமிழ், மலாய் மொழி பாடங்களின் பாடத்துறைத் தலைவராக இருக்கிறார். கடந்த 14 ஆண்டுகளாக ஆசிரியர் பணியாற்றி வரும் இவர், நல்லாசிரியர் விருது தமது சேவையைக் கௌரவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“தொடர்ச்சியான வாசிப்பு, கற்றல், புரிதல், பேசுதல் ஆகியவற்றின் மூலம் மொழித்திறன் மேம்படுத்தப்படும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவதோடு தமிழ்மொழிக் கற்றலில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்குப் பொறுமையாகப் பல உத்திகளைக் கற்றுத் தருவேன்,” என்றார் குமாரி ஸேனாப்.

‘தமிழ் முரசைப் பயன்படுத்துவேன்’

தமிழ்மொழியின் மீதுள்ள ஈடுபாடு திருமதி சூடிக்கொடுத்தாள் கணேசனின் குடும்பத்தில் காலங்காலமாக இருந்து வருகின்றது.

அவரது தந்தையார் திரு

ச.தெய்வநாயகம், கல்விக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர்மீது காட்டிய மதிப்பையும் மரியாதையையும் பார்த்து வளர்ந்ததால், சிறு வயதிலிருந்தே ஆசிரியர் தொழிலைத்தான் மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் திருமதி சூடிக்கொடுத்தாள். தமிழ்மொழியைத்தான் கற்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்த அவர், தம் 34ஆவது வயதில் ஆசிரியர் பணியில் இணைந்தார்.

அதற்காக தேசியக் கல்விக் கழகத்தில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயக் கல்வியை முடித்தார். அதில் சிறப்புத் தேர்ச்சியும் பெற்றார்.

தம்மை மேம்படுத்திக்கொள்ளும் மற்றொரு படியாக, சிங்கப்பூர் நிர்வாகக் கழகப் (சிம்) பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றதோடு தலைசிறந்த மாணவருக்கான வளர்தமிழ் இயக்கத்தின் தங்க விருதையும் பெற்றார். 23 ஆண்டுகளாக தமிழ் மாணவர்களுக்காகக் கல்விச்சேவை புரிந்து வரும் இவர், கடந்த ஆறு ஆண்டுகளாக தெமாசெக் தொடக்கக் கல்லூரியில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பயிலும் உயர்நிலை மாணவர்களுக்கு உயர்தமிழ் கற்பித்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் தொடக்கப்பள்ளிகளிலும் பின்னர் கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவின் பாட நூலாக்கக் குழுவிலும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்திலும் பணிபுரிந்துள்ளார் 58 வயதான திருமதி சூடிக்கொடுத்தாள்.

திங்கட்கிழமைகளில் தமிழ் முரசில் வரும் செய்திகளைப் படித்து அது குறித்த கருத்துகளை மாண வர்களையே எழுத வைப்பது, செய்தியாளராகப் பாவனை செய்து கொண்டு செய்திகளை வாசிக்கச் செய்வது போன்ற பல கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்தி பாடங்களைச் சுவைபடக் கற்பிக்கிறார் திருமதி சூடிக்கொடுத்தாள்.

ஏற்கெனவே கல்வி அமைச்சின் சேவைத்தரத்துக்கான உன்னத விருது, உன்னத சேவை விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், இவ்வாண்டு நல்லாசிரியர் விருதைப் பெற்றதில் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகக் கூறினார்.

கற்பித்தல் எனும் புனித சேவையை மேலும் தொடர்வதற்கு ஊக்குவிப்பாக இந்த விருது அமையும் என்றார் அவர்.

இலக்கியம் புகட்ட வழிமுறைகள்

‘ஏ’ நிலைத் தேர்வுத் தகுதியுடன் முன்னைய கல்விக் கழகத்தில் தமிழாசிரியருக்கான ஆசிரியர் பயிற்சியை இரண்டு ஆண்டுகள் மேற்கொண்டு தமது 22ஆம் வயதில் தமிழாசிரியராகப் பணிபுரிய தொடங்கினார் திருமதி அமுதா மோகன்.

தொடக்கப்பள்ளியில் 8 ஆண்டுகள், உயர்நிலைப்பள்ளிகளில் 19 ஆண்டுகள் என 27 ஆண்டுகள்தமிழாசிரியராகச் சேவை ஆற்றிய திருமதி அமுதா, கடந்த எட்டு ஆண்டுகளாக உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தமிழ், உயர்தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களைக் கற்பித்து வருகிறார்.

இரண்டரை ஆண்டுகள் பகுதி நேரமாக தேசிய கல்விக் கழகத்தில் மேல்நிலைப் பட்டயக் கல்வியை மேற்கொண்டார் திருமதி அமுதா.

அதன் பின் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், 2006ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நிர்வாகக் கழகப் (சிம்) பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டக்கல்வியை முடித்தார்.

மறு ஆண்டிலேயே தேசிய கல்விக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டக் கல்வியில் சேர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் பட்டம் பெற்றார்.

மாணவர்களிடம் தமிழ்மொழிக் கற்றலை ஊக்குவிக்கும் இவர், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இலக்கியப் பாடத்தைக் கற்போரின் எண்ணிக்கையையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.

இந்தியப் பாரம்பரிய இசைக் கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களின் மகிழ்வூட்டும் கற்றலுக்கும் இவர் வழியமைத்துள்ளார்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கல்வியமைச்சின் ஆதரவோடு தொடங்கிய மற்றுமொரு பாடம் தேசிய தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டமாகும். இப்பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களில் சிலர் இன்று தமிழ்மொழிசார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

“இந்த விருது என் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றாலும் என் மாணவர்களோடு எனக்குள்ள நல்லுறவையும் இது பிரதிபலிக்கிறது,” என்று கூறினார் 57 வயதான திருமதி அமுதா.

திருமதி இராஜா கீதா: கற்பித்தலில் தாய்போல் இருக்க வேண்டும்

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

கற்பித்தலில் ஒரு தாயைப்போல் அன்பாகவும் கண்டிப்பாகவும் இருக்கவேண்டும் என்று கூறும் திருமதி இராஜா கீதா, 44, தமிழ் மொழியை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அக்கறையுள்ள ஆசிரியராகத் திகழ விரும்புகிறார்.

வரலாற்று ஆசிரியரான தந்தையின் ஊக்கமே கற்பித்தல் மீதான தமது ஆர்வத்துக்குக் காரணம் என்கிறார் அவர்.

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகத்தில் தமிழ் இளங்கலைப் பட்டத்தை முடித்த திருமதி கீதா, பின்னர் தேசிய கல்விக் கழகத்தில் சேர்ந்து பட்டக்கல்வியை மேற்கொண்டார்.

“இன்றைய மாணவர்கள் ஆங்கிலத்தில் சிந்தித்து அதற்குப் பின் தமிழில் பேச முயற்சி செய்வதால் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்குத் தமிழ் பேசும் சூழலை அதிகம் உருவாக்கி அவர்களைத் தமிழில் அதிகம் சிந்தித்து பேச ஊக்குவிக்க விரும்புகிறேன்,” என்கிறார் திருமதி கீதா.

“தொழில்நுட்பப் பயன்பாடு இல்லை என்றால் மாணவர்கள் சலிப்படைந்து விடுகிறார்கள். வகுப்புகளில் ஒலிக்காட்டி, ஒளிக்காட்டி, ‘கஹூட்’ போன்ற இணையத் தளங்களின் மூலம் கற்பிக்கும்போது மாணவர்கள் உற்சாகமடைகிறார்கள்,” என்றார் அவர்.

கற்பிக்கும் முறை பிடித்திருந்தால்தான் மாணவர்களுக்குத் தமிழ் மீது ஆர்வம் அதிகரிக்கும் என்ற அவர், சிறந்த பயிற்சி ஆசிரியர் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.

குமாரி நஸிமா பானு: ஊக்குவிப்பாய் அமைந்த விருது

“நான் சிறுவயதிலிருந்தே என் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்த முறைகளை ஆர்வத்துடன் கவனித்து வந்தேன். மாணவர்களின் சூழலைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு அவர்கள் கற்பித்தது என்னைக் கவர்ந்தது. நான் ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணத்தையும் அது உருவாக்கியது,” என்று கூறும் 26 வயதான குமாரி நஸிமா பானு, மாணவர்களுடன் நல்லுறவை வளர்ப்பது அவசியம் என்றார். இன்னோவா தொடக்கக்கல்லூரியில் ‘ஏ’ நிலைத் தேர்வுகளை முடித்த குமாரி நஸிமா, 2016ஆம் ஆண்டில் பட்டயக் கல்வியை முடித்தார்.
தேசிய கல்விக் கழகம் புதிதாகத் தொடங்கிய முழுநேர இளங்கலை கல்வி பட்டப் படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
வீட்டில் தமிழ்ப் புழக்கம் அதிகம் என்று கூறிய அவர், பேச்சு வழக்கில் பழமொழிகளைத் தம் தாயார் இயல்பாகப் பயன்படுத்துவார் என்றார். தம்முடைய தமிழ் ஆர்வத்துக்கு தாயார்தான் முக்கிய காரணம் என்றார் அவர்.
அட்டை விளையாட்டுகள், பாரம்பரிய விளையாட்டுகள், தொழில்நுட்பம் சார்ந்த பாட முறைகள் போன்றவை மாணவர்களை வெகுவாகக் கவர்வதாகச் சொன்ன அவர், மற்ற மொழிகளைக் கற்பிக்கும் இணையத் தளங்கள் கையாளும் உத்திகளைத் தமிழ் மொழிக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்துவதாகச் சொன்னார்.
எதிர்காலத்தில் நல்ல ஆசிரியராகத் திகழ வேண்டும் என்ற ஊக்கத்தை நேற்று வழங்கப்பட்ட சிறந்த பயிற்சி ஆசிரியருக்கான விருது வழங்கியிருப்பதாகச் சொன்னார் குமாரி நஸிமா.

மாணவர்களை ஈர்க்க புத்தாக்க உத்திகளோடு தமிழ் கற்பிப்பு

எஸ்.வெங்கடேஷ்வரன்

பெற்றோர், ஆசிரியர், மாணவர் ஆகிய முத்தரப்பினரும் ஒன்று சேர்வது சிறந்த கல்விக்கான செம்மையான வழி என்பதை வலியுறுத்தினார் 18 ஆண்டுகள் தமிழாசிரியராக இருக்கும் திருமதி நந்தினி இளங்கோவன், 42.
தொடக்கப்பள்ளிப் பிரிவில் நல்லாசிரியர் விருது பெற்ற மூவரில் கேலாங் மெத்தடிஸ்ட் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த திருமதி நந்தினியும் ஒருவர்.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகளுக்கான தமிழ் மொழி பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவில் துணைத் தலைவராகவும் செயலாற்றினார் திருமதி நந்தினி.
“ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஓர் ஊரே தேவை என்ற கூற்று உண்டு. அதைப்போல், பெற்றோர், மாணவர், ஆசிரியர் ஒன்றிணைவது முழுமையான கற்றலுக்கு முக்கியம். பெற்றோரிடம் பேசத் தயங்கக்கூடாது, நட்புறவு வளர்ப்பதற்கு முனைய வேண்டும்,” என்றார் அவர்.
கணினி விளையாட்டுகள், செயலிகள், கதைகள், பாடல்கள் போன்ற உத்திகளைக் கொண்டு மாணவர்களைத் தமிழ் கற்க ஈர்த்து வருகிறார் திருமதி நந்தினி.
பல வகையான பலகை விளையாட்டுகளைப் பாடத்திட்டங்களில் இணைத்து சுவாரசியமான வழியில் கற்று தரும் மற்றோர் ஆசிரியர் திருமதி மீனாட்சி ஜுனேஷ், 36.
ஹுவாமின் தொடக்கப்பள்ளி ஆசிரியரான இவர், “வேற்றுமை உருபுகள், ஒலி வேறுபாடுகள் போன்றவற்றை வைத்து விளையாடும் இந்த விளையாட்டுகளில் வெற்றி பெற மாணவர்களுக்கு மொழி வளம் வலிமையாக இருக்கவேண்டும். விளையாட்டுகள் மூலம் ஏற்படும் போட்டித்தன்மை கற்பதற்கான ஊக்கத்தை அளிக்கும்,” என்று கூறினார்.
தமிழ்ப் புழக்கத்தைக் கட்டாயப்படுத்திய குடும்பச் சூழலில் வளர்ந்தது, தமிழின் மீதான ஆர்வத்தை வளர்த்தது என்ற மீனாட்சி, தற்போது சிறந்த ஆசிரியராக இருக்க குடும்பமும் பள்ளியும் மிகுந்த ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 30 ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி தமிழாசிரியராகப் பணியாற்றும் 53 வயது திருவாட்டி சுபாஷினி கோபாலகிருஷ்ணனும் நல்லாசிரியர் விருதைப் பெற்றார். கடந்த 20 ஆண்டுகளாக இவர் செம்பாவாங் தொடக்கப்பள்ளியில் கற்றுக்கொடுக்கிறார்.
கைபேசி, கணினி சாதனங்கள் மூலம் மாணவர்கள் எளிதில் பயிற்சிகளைச் செய்துவிடுகிறார்கள் என்று குறிப்பிட்ட திருவாட்டி சுபாஷினி, தற்போதைய காலக்கட்டத்தில் கற்பித்தல் மேம்பட்டுள்ளது என்றும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!