சுடச் சுடச் செய்திகள்

டெங்கிப் பரவலை ஒடுக்க மேலும் 14,000 'கிராவிட்ராப்' பொறிகள்

டெங்கிப் பரவலை ஒடுக்கும் முயற்சியாக, தேசிய சுற்றுப்புற அமைப்பு மேலும் 14,000 கிராவிட்ராப் பொறிகளைப் படிப்படியாகப் பயன்படுத்தவுள்ளது. புதிய வீவக குடியிருப்புகளிலும் தரைவீடு பேட்டைகளிலும் அடுத்த நான்கு மாதங்களில் இப்பொறிகள் வைக்கப்படும். 

சிறிய கறுப்புநிறக் கலனான கிராவிட்ராப் பொறி, முட்டை இடுவதற்கு நீர்ப்பரப்பைத் தேடும் பெண் ஏடிஸ் எஜிப்டாய் கொசுக்களைச் சிக்கவைக்கும். 

தேசிய சுற்றுப்புற அமைப்பு ஏற்கனவே வைத்திருக்கும் 50,000 பொறிகளோடு கூடுதலான பொறிகள் களமிறக்கப்படுவதாகச் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி திங்கட்கிழமை (செப்டம்பர் 2) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.  டெங்கி நிலவரம் பற்றி நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குத் திரு மசகோஸ் பதிலளித்தார். 

டெங்கியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஆகஸ்ட் 24ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 10,748 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 2ஆம் தேதி 9,135 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.  இந்த அதிகரிப்புக்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாகத் திரு மசகோஸ் தெரிவித்தார்.

Property field_caption_text
டெங்கிக் காய்ச்சலைப் பரப்பும் 'ஏய்டிஸ்' கொசுக்கள். கோப்புப் படம்.

கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வெப்பமான பருவநிலை, மக்களிடையில் குறைவான எதிர்ப்புச்சக்தி ஆகியவை அவை.

கடந்த 2013ஆம் ஆண்டின் மோசமான டெங்கிப் பரவலுக்குப் பிறகு இப்போது டெங்கியைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டாய் கொசுக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. அதோடு, இவ்வாண்டின் முதல் பாதியின் சராசரி வெப்பநிலை, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தைவிட 0.7 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. 

சிங்கப்பூர் கடந்தகாலத்தில் டெங்கிப் பரவலை வெற்றிகரமாக ஒடுக்கியதால், ஏற்கனவே டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் விகிதம் 2004ஆம் ஆண்டின் 59 விழுக்காட்டிலிருந்து 2017ஆம் ஆண்டு 41 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. எனவே, டெங்கியால் பாதிக்கப்படக்கூடிய மக்களின் விகிதம் அதிகமாக இருக்கிறது. 

டெங்கி நிலவரத்தைச் சமாளிக்க தேசிய சுற்றுப்புற அமைப்பு பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் திரு மசகோஸ் தெரிவித்தார். 

டெங்கிப் பரவல் அதிகமாக இருக்கும் வட்டாரங்களில் மலட்டுத்தன்மையுள்ள ஆண் கொசுக்களை வெளியாக்கும் “உல்பாக்கியா” திட்டப்பணியின் முன்னோட்டச் சோதனை துரிதப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார். 

சோதனையின் முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பம் சிறிய பகுதிகளில் மட்டுமே சோதிக்கப்பட்டிருப்பதாகவும், பெரிய வட்டாரங்களில் பலன் கிடைக்குமா என்பதைக் கண்டறியும் மூன்றாம் கட்டச் சோதனை தற்போது நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

டெங்கியை ஒடுக்கும் முயற்சிகள் பலனளித்து வருவதாகவும் திரு மசகோஸ் தெரிவித்தார். ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் 664 ஆக இருந்த டெங்கிப் பரவல் எண்ணிக்கை, ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 480க்குக் குறைந்தது. 

ஆயினும், “டெங்கி அதிகமாகப் பரவும் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான உச்சக் காலகட்டத்தில் நாம் இன்னமும் இருக்கிறோம். நமது சுற்றுவட்டாரங்களிலும் இவ்வாண்டு டெங்கிப் பரவல் அதிகரித்திருக்கிறது. நாம் விழிப்புடன் இருந்து, ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஒரு சமூகமாகத் தொடர்ந்து செயல்படவேண்டும்,” என்றார் திரு மசகோஸ்.  

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon