சிங்கப்பூர் அனைத்துலக இந்திய விற்பனைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது

சிங்கப்பூர் அனைத்துலக இந்திய விற்பனைத் திருவிழா கோலாகலமாக நேற்று தொடங்கியது. இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள ஆடை ஆபரணங்கள், கைவினைப்பொருட்கள், மளிகைப்பொருட்கள், உணவுப் பொருட்கள், புத்தகங்கள், ஆயுர்வேத மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவை 120 விற்பனைக் கூடங்களில் கொட்டிக்கிடக்கின்றன. 

பத்தாவது முறையாக நடைபெறும் இந்த விற்பனைத் திருவிழாவில் புத்தக விற்பனை அங்கம் முதன்முறையாக இடம்பெறுகிறது. ‘அவ்வை டிரஸ்ட்’ என்ற இந்திய நிறுவனம், ‘தி கிரேட் இந்தியன் புக் லாஞ்ச்’ என்ற கடையை இவ்விழாவில் அமைத்துள்ளது.

இந்த விற்பனைத் திருவிழாவை ‘சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்’ (எஸ்பிஎச்) குழுமத்தைச் சேர்ந்த ‘தமிழ் முரசு’, ‘தப்லா!’ இதழ்களும் ‘டி ஐடியாஸ்’ நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்திய சுற்றுப்பயணக் கழகம், அபிராமி ஜுவல்லர்ஸ், ‘லிவ்ஸ்பேஸ்.காம்’, ‘ருத்ராலைஃப்’, ‘சுவை ஃபுட்ஸ்’ ஆகியவை நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள். 

“இந்தியர்களின் கலாசாரத்தையும் கைவினைத்திறனையும் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த விற்பனைத் திருவிழா நல்ல வாய்ப்பளிக்கிறது,” என்றார் எஸ்பிஎச் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டனி டான்.

‘சன்டெக் சிங்கப்பூர்’ அனைத்துலக மாநாடு, கண்காட்சி அரங்கத்தில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த விற்பனைத் திருவிழா இடம்பெறும்.

வரும் ஞாயிறன்று அபிராமி ஜுவல்லர்ஸ், வசந்தம் கலைஞர்களுடன் சேர்ந்து மாலை 5.30 மணி அளவில் ஆபரணங்களுடன் அழகுராணி அங்கம் ஒன்றை நடத்துகிறது.