வெள்ளிக்கிழமை காலை காற்றுத்தரம் மேம்பட்டது

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) காலை வேலைக்குச் சென்றோரும் தொடக்கப்பள்ளி இறுதியாண்டு தேர்வின் முதல் தேர்வு எழுதச்சென்ற தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களும் ஓரளவு நல்ல காற்றைச் சுவாசிக்க முடிந்தது. 

முன்தினம் இரவில் புகைமூட்டம் தணிந்ததால், காற்றுத்தரம் காலையில் மேம்பட்டிருந்தது.  வெள்ளிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, 24 மணிநேர காற்றுத்தரக் குறியீடு 59 முதல் 64 ஆக இருந்தது. வியாழக்கிழமை இரவு 91 முதல் 103 ஆக இருந்த குறியீட்டைவிட இது குறைவு. இன்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி அதுவே 63 முதல் 64 ஆக இருந்தது.

Property field_caption_text
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

நண்பகல் 12 மணிக்குக் காற்றுத்தரக் குறியீடு 60 முதல் 63 ஆக இருந்தது. காற்றுத்தரக் குறியீடு 51 முதல் 100 வரை இருந்தால், மிதமான நிலையைக் குறிக்கிறது. 101 முதல் 200 வரையிலான குறியீடு, ஆரோக்கியமற்ற நிலையாகக் கருதப்படுகிறது. 

இதற்கிடையே, ஒரு மணிநேரத்தின் நுண்மாசுப்பொருள் அளவு காலை 9 மணிக்கு ஒரு கனமீட்டருக்கு 15 முதல் 29 மைக்ரோகிராமாக இருந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. இது வழக்கமான அளவுக்குள் உள்ளடங்குகிறது.  வெள்ளிக்கிழமை நண்பகல் நேரப்படி, நுண்மாசுப்பொருள் அளவு 25 முதல் 29 மைக்ரோகிராமாக இருந்தது. 

வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணி வரை, காற்றுத்தரம் வியாழக்கிழமை இருந்ததைப் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.