பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்திசெய்யாத மின்ஸ்கூட்டர்களைத் திருப்பிக் கொடுப்போருக்கு $100 சன்மானம்

புதிய பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத மின்ஸ்கூட்டர்களைக் குறிப்பிடப்பட்ட இடங்களில் திருப்பிக் கொடுக்க அவற்றின் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டால் சன்மானமாக அவர்களுக்கு $100 வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை, யுஎல்2272 சான்றளிக்கப்படாத சாதனங்களை அவற்றின் உரிமையாளர்கள் திருப்பிக் கொடுக்க வழி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. பல்வேறு வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் மின்கழிவு மறுசுழற்சி நிறுவனங்கள் அமைத்துள்ள 180 இடங்களிலும் சின் மிங் பகுதியிலுள்ள ஆணையத்தின் அலுவலகத்திலும் மின்ஸ்கூட்டர்களை அவற்றின் உரிமையாளர்கள் திருப்பிக் கொடுக்கலாம். இந்த நிறுவனங்கள் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவை.

Property field_caption_text
தரைத்தளத்தில் மின்ஸ்கூட்டரில் அமரும் ஓர் ஆடவர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

மின்ஸ்கூட்டர்களை அப்புறப்படுத்துவதற்கு பொதுவாக இந்த நிறுவனங்கள் கட்டணம் விதிப்பது வழக்கம். ஆனால், எந்தவொரு செலவுமின்றி உரிமையாளர்கள் தங்களது மின்ஸ்கூட்டர்களைத் திருப்பிக் கொடுக்க தாம் வழி செய்திருப்பதாக ஆணையம் கூறியது.

;யுஎல்2272’ சான்றளிக்கப்படாத சாதனங்களை இங்கு ஏறத்தாழ 80,000 பேர் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, புதிய தரநிலையைப் பூர்த்தி செய்யாத மின்ஸ்கூட்டர்களைக் குறிப்பிடப்பட்ட அந்தந்த இடங்களில் மட்டுமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து, புதிய பாதுகாப்புத் தரநிலைக்கு உட்படுத்தப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். புதிய தரநிலையைப் பூர்த்தி செய்யாத சாதனங்களை வைத்திருப்பவர்கள், நிர்ணயிக்கப்பட்ட இந்தக் காலக்கெடுவிற்குள் அவற்றைத் திருப்பிக் கொடுக்க வகைசெய்யவே ஆணையம் மேற்கண்ட இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

கடந்த ஜூலையிலிருந்து, தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான மொத்தம் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டு முதற்பாதியில், இச்சாதனங்கள் தொடர்பான 49 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன. இந்த எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க, கடந்த ஆண்டு முழுவதும் 52 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன என்பது நினைவுகூரத்தக்கது.