கட்டுமானத் தள விபத்தில் இறந்த இந்திய ஊழியர் கடந்த ஆண்டுதான் மணமுடித்தார்

செய்தி: வைதேகி ஆறுமுகம், எஸ். வெங்கடேஷ்வரன்

நொவீனா கட்டுமானத் தள விபத்தில் இறந்த வேல்முருகனின் மனைவி கருவுற்றிருந்தார்.

மனைவி கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியால் மகிழ்ச்சியடைந்த திரு வேல்முருகன், உடனடியாக ஊர் திரும்பத் திட்டமிட்டு, இரண்டு மாதங்களில் பயணம் வைத்திருந்த நிலையில், திங்களன்று நடந்த கட்டுமானத்தள விபத்தில் உயிரிழந்தார்.

ஜாலான் டான் டோக் செங்கிலுள்ள கட்டுமானத் தளத்தில் பாரந்தூக்கி விழுந்ததில் மரணம் அடைந்த 28 வயது கட்டுமானத் துறை ஊழியர் முத்தையா வேல்முருகனின் நல்லுடல் இன்று (6 நவம்பர்) தமிழகம் கொண்டுசெல்லப்பட்டது.

அதற்கான ஏற்பாடுகளைச் செய்த ‘இந்து காஸ்கெட்’ நிறுவனம் நேற்று மாலை சுமார் 5.40 மணிக்கு அவரது உடலை சாங்கி விமான நிலையத்திற்குக் கொண்டு சென்றது.
ஜாலான் டான் டோக் செங்கிலுள்ள கட்டுமானத் தளத்தில் பாரந்தூக்கி விழுந்ததினால் நவம்பர் 4ஆம் தேதியன்று திரு வேல்முருகன் மரணம் அடைந்தார்.

பாரந்தூக்கி 300 கிலோ கிராம் எடையுள்ள சாரக்கட்டை ஏற்றி அதனை நகர்த்திக்கொண்டிருந்தபோது திடீரென்று முறிந்து விழுந்ததில், கீழே நின்றுகொண்டிருந்த வேல்முருகனும் மற்றொரு பங்ளாதேஷ் ஊழியரும் காயமடைந்தனர். சம்பவம் நடந்த இடத்திலேயே வேல்முருகன் உயிரிழந்தார்.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த கேலாங் பாருவில் உள்ள ‘இந்து காஸ்கெட்’ கட்டடத்திற்கு வந்திருந்த அவரது நண்பர்கள், வேல்முருகனைப் பற்றித் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.

திருமணத்திற்காக ஆறு மாத காலம் விடுப்பு எடுத்து ஊருக்குச் சென்றிருந்த வேல்முருகன் மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் சிங்கப்பூர் திரும்பியிருந்தார் என்று அவரது உறவினர் கூறினார். அவரும் வேல்முருகனின் உடலுடன் இன்று தமிழகம் கிளம்பினார்.

ஜெயங்கொண்டம், சூரியமணல் என்ற கிராமத்தில் பிறந்த அவர் திருமணம் முடிந்து சிங்கப்பூருக்குத் திரும்பிய வேல்முருகன், தமது மனைவி முதல் குழந்தையைக் கருவுற்றிருப்பதை அறிந்து மீண்டும் ஊருக்குச் செல்லத் திட்டமிட்டார். இன்னும் இரண்டு மாதங்களில் அவர் பயணம் வைத்திருந்தார்.

“தனது மாத சம்பளத்தில் $700ஐ வேல்முருகன் ஊருக்கு அனுப்பிவிடுவார். குடும்பத்தை முன்னேற்ற அவர் உழைத்தார்,” என்று அவரது நண்பர்கள் கூறினர்.

கூலி வேலை செய்யும் பெற்றோரின் சுமைகளைக் குறைக்க மூத்த மகனான திரு வேல்முருகன் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு வந்தார்.
குடிசையில் வாழ்ந்த அவரது குடும்பத்தினர் தற்போது மாடி வீட்டிற்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர் என அவரது நண்பர் திரு ராஜா குறிப்பிட்டார்.
“வேல்முருகன் கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்பவர். அவருடன் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். எல்லோருக்கும் உதவும் குணம் படைத்த அவரைப்போல் ஒருவரைக் காண்பது அரிது.

“திருமணம் ஆன சில காலத்திலேயே இந்தத் துயரம் நடந்திருப்பது எங்களுக்குப் பெரிய இழப்பாக உள்ளது,” என்றார் 31 வயது திரு ராஜா.
சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்த திரு ராஜா சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகளாக கட்டுமான ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

“சக ஊழியர்களுடன் சகஜமாக பழகக்கூடியவர். யாராவது சோகமாக இருந்தால், உடனே அவர்களை உற்சாகப்படுத்தி, ஊக்குவிப்பார். சுக துக்கங்களைப் பகிர்ந்துகொண்டு எனக்கு வேலைகளைச் சிறப்பாக செய்ய கற்றுக்கொடுப்பார். அவரது இழப்பிலிருந்து என்னால் மீளமுடியவில்லை,” என்றார் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரியும் திரு ரவிக்குமார். திரு வேல்முருகன் பணிபுரிந்த நிறுவனத்தில் இவர் வேலை செய்கிறார்.

திரு வேல்முருகனின் இழப்பீடு தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்கும் உதவிகளுக்கும் ‘கே ரவி லா கார்ப்பரேஷன்’ சட்ட நிறுவனம் அவரது குடும்பத்தாருக்கு உதவி வருகிறது. இறுதி சடங்குகளுக்குப் பிறகு குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்து தரவுள்ளதாக ‘கே ரவி லா கார்ப்பரேஷன்’ உறுதியளித்தது.

இறந்த திரு வேல்முருகன் எல்கேடி கான்ட்ரெக்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றும் காயமடைந்த ஊழியர் பிஎச்சிசி கன்ஸ்டிரக்‌ஷன்ஸைச் சேர்ந்தவர் என்றும் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த பங்ளாதேஷ் ஊழியர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர் நிலையம் உதவி

விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியருக்கும் காயமடைந்த மற்றோர் ஊழியருக்கும் மருத்துவச் செலவுகளும் இழப்பீடும் தரப்படும் என வெளிநாட்டு ஊழியர்களுக்கான “மைக்ரன்ட் வொர்க்கர்ஸ் சென்டர்” நிலையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

பணித்தளத்தின் மத்திய குத்தகையாளரும் இரு ஊழியர்களின் முதலாளிகளும் “பாதிக்கப்பட்ட இரு ஊழியர்களுக்கும் தங்களது கடமைகளை நிறைவேற்றுவார்கள்” என நிலையம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.

காயமடைந்த 35 வயது பங்ளாதேஷ் ஊழியருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் முழுமையாகக் குணமடைந்த பின்னர் தொடர்ந்து வேலையில் நீடிப்பார் என்றும் வெளிநாட்டு ஊழியர் நிலையம் நம்பிக்கை அளித்தது.

அதோடு, பிரதான குத்தகையாளரான கஜிமா ஓவர்சீஸ் ஆசியா (சிங்கப்பூர்) நிறுவனமும் இறந்த ஊழியர் பணிபுரிந்த ‘எல்கேடி கன்ஸ்ட்ரக்டர்ஸ்’ நிறுவனமும் அவரது குடும்பத்திற்கு ரொக்கத் தொகையும் அனுப்பி வைக்கவுள்ளன.
“வேலையிடத்தில் ஏற்படும் காயங்களுக்கான இழப்பீடு வழங்கப்படுவதற்கு முன்பாக அவர்கள் எதிர்நோக்கும் சிரமமான காலகட்டத்தைக் கடப்பதற்கு இது உதவியாக இருக்கும்,” என்று நிலையம் கூறியது.
இத்தகைய சமயங்களில் தேவை ஏற்பட்டால், வேலை இட ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வெளிநாட்டு ஊழியர் நிலையம் கூறியது.

சமூகநல அமைப்பு நிதிதிரட்டு

‘இட்ஸ்ரெயினிங்ரெயின் கோட்ஸ்’ எனும் சமூகநல அமைப்பு உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு நிதி திரட்டுகிறது. அமைப்பின் நிறுவனர் குமாரி திபா சுவாமிநாதன் நிதி திரட்டு தளமான Give.asia இணையத் தளத்தில் நிதி திரட்டப்படுவதாகக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!