ஹெங்: இந்தியாவுடன் வர்த்தக இணைப்புகள் தேவை

இந்தியாவின் வளர்ந்துவரும் சந்தைக்குள் நுழைவதன் மூலம் சிங்கப்பூர் இந்திய வர்த்தக சமூகம், சிங்கப்பூரின் பொருளியலை வளர்க்க உதவலாம் என்றார் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட்.

சிறந்த தொழில்முனைவர்களை கௌரவிக்கும் ‘சிக்கி’ எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழிற்சபையின் தொழில்முனைவர் விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு ஹெங் கலந்து கொண்டார். மரினா பே சேண்ட்சில் நவம்பர் 9ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பேசிய திரு ஹெங், “வலுவான சமூகத்தை உருவாக்குவது, ஒன்றாக புத்தாக்கத்தில் ஈடுபடுவதற்கும் அனைத்துலகமயமாவதற்கும் புதிய பாதைகளைக் தேடுவது ஆகியவற்றின் மூலம் இந்திய வர்த்தக சமூகம் தொடர்ந்து சிங்கப்பூரின் வரலாற்றில் முக்கிய அங்கம் வகிக்கும்,” என்று கூறினார். 16ஆம் முறையாக நடந்த இவ்விருது நிகழ்ச்சியில், சிக்கியின் 95ஆவது நிறைவுக் கொண்டாட்டம் நடைபெற்றது. இளம் தொழில்முனைவர் விருது, வளர்ந்துவரும் தொழில் முனைவர் விருது, அனுபவமிக்க தொழில்முனைவர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என மொத்தம் எட்டு விருதுகள் 10 பேருக்கு வழங்கப்பட்டன.

வளர்ந்துவரும் சந்தையாகவும் சிங்கப்பூரின் இந்திய நிறுவனங்களுக்கு இயல்பாக நாடும் முதல் தளமாகவும் திகழும் இந்தியாவில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான நல்ல நிலையில் சிக்கியும் அதன் உறுப்பினர்களும் இருப்பதாக திரு ஹெங் கூறினார்.

“இரு தரப்பினரும் பயனடைவதற்கு நாம் ஏற்கெனவே பல இணைப்புகளை நிறுவியுள்ளோம். மக்களிடையே உள்ள இணைப்புகள் முதல் வர்த்தக முதலீடு வரை வர்த்தகங்கள் இருதரப்பினரும் ஆதாயம் அடைய வகை செய்கின்றன,” என்றார் அவர். வெளிநாடுகளில் முதலீடு செய்ய திட்டமிடும் நிறுவனங்களுக்கு உதவ அனைத்துலக வர்த்தகப் பிரிவு ஒன்றை அமைக்க சிக்கி திட்டமிடுகிறது. அது ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’, சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் ஆகியவற்றுடன் செயல்பட்டு இந்தியாவை மையப்படுத்தும் சந்தைத் தொடர்புகளை ஏற்படுத்தி ஆலோசனையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

வாழ்நாள் சாதனையாளர் விருதை 94 வயது திரு அமீரலி ஜுமபாய் (படம்) பெற்றார். 14 ஆண்டுகளாக ‘ஸ்காட்ஸ் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் இவர். “இதுபோன்ற விருது என்னை கௌரவப்படுத்துவதுடன் மற்ற தொழில்முனைவர்களையும் அங்கீகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ‘சிக்கி’ ஆண்டுக்கு ஒரு முறை இந்நிகழ்ச்சியை நடத்தி வருவதால் பல தொழில்முனைவர்கள் வர்த்தக துறையில் முன்னேற ஊக்கம் பெறுகின்றனர்,” என்று தமது மகிழ்ச்சியை உணர்ச்சிப்பூர்வமாக பகிர்ந்துகொண்டார் திரு அமீரலி.