அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

சாங்கி விமான நிலையத்தின் அண்மைய ஈர்ப்பாக அமைந்துள்ள ‘ஜுவல்’, உலக அளவில் சிறந்த சில்லறை விற்பனை சொத்துச்சந்தைத் திட்டப்பணிகளுக்கான  ஆக உயரிய விருதைப் பெற்று, மேலும் மிளிர்கிறது. 

சில்லறை விற்பனை சொத்துச்சந்தை தொழில்துறையில் நேர்த்தி, புத்தாக்கம், படைப்பாற்றல் போன்றவற்றை அங்கீகரிக்கும் ‘மேபிக் அவார்ட்ஸ்’ தேர்வுக் குழுவின் சிறப்பு விருதை அது வென்றுள்ளது.

இந்த விருது பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் வழங்கப்பட்டதாக ஜுவல் சாங்கி விமான நிலையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

24வது ஆண்டாக வழங்கப்படும் இந்த விருதுகளுக்காக 11 பிரிவுகளில் 33 நாடுகளைச் சேர்ந்த 111 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆகச் சிறந்த பொழுதுபோக்கு கருத்துப்படிவம், ஆகச் சிறந்த கடைத்தொகுதி ஆகிய இரண்டு பிரிவுகளில் ஜுவல் சாங்கி விமான நிலையம் விண்ணப்பங்களை அனுப்பியிருந்தது.

ஆனால், சில்லறை விற்பனை சொத்துச்சந்தை நிபுணர்களை உள்ளடக்கிய தேர்வுக்குழு, ஜுவல் சாங்கிக்கு இந்தத் துறையில் சிறப்பு விருதை வழங்கியது. சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களிலும் மிகச் சிறந்த திட்டப்பணிக்கு தேர்வுக் குழுவின் சிறப்பு விருது வழங்கப்படும்.  

மாறிவரும் சில்லறை விற்பனைத் துறையில் வித்தியாசமான, சில்லறை விற்பனை, உணவு, குடிபானம், பொழுதுபோக்கு, நலவாழ்வு போன்றவற்றை உள்ளடக்கிய, வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஈர்க்கக்கூடிய விதத்திலான வாழ்க்கைமுறை மையங்கள் தேவைப்படுகின்றன என்று ‘மேபிக் அவார்ட்ஸ்’-ன் தலைமை நடுவர் மேய்ட் லீகே கூறினார்.

அதற்கேற்ற மிகச் சரியான உதாரணமாக ஜுவல் சாங்கி விமான நிலையம் இருப்பதாக விருது நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

ஜுவல் சாங்கியில் தங்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான பரிவர்த்தனை, உணவு அனுபவங்களை வழங்கிய 280 வாடகைதாரர்களுடன் இந்த வெற்றியைப் பகிர்ந்துகொள்வதாக ஜுவல் தலைமை நிர்வாகி ஹங் ஜீன் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். ஆண்டுக்கு 40 முதல் 50 மில்லியன் பார்வையாளர்களை அது ஈர்க்கும் என்ற எதிர்பார்ப்பையும் மிஞ்சியுள்ளது அந்த எண்ணிக்கை.

கடந்த மாதம் ஜுவலின் அதிகாரபூர்வ திறப்பு விழாவின்போது பேசிய பிரதமர் லீ சியன் லூங், “உடனடியாக அடையாளம் காணத்தக்க சிங்கப்பூரின் சின்னங்களில் ஒன்றாக,” ஜுவல் சாங்கி வளாகம் உருப்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity