லிட்டில் இந்தியாவில் இந்திய உணவை ருசித்த டேவிட் பெக்கம்

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் முன்னாள் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான திரு டேவிட் பெக்கம்மைக் காண லிட்டில் இந்தியாவில் உள்ள உணவங்காடியில் இன்று (நவம்பர் 16) பிற்பகல் வேளையில் ரசிகர்கள் திரண்டனர்.

‘பேட்டல் ஆஃப் தெ ரெட்ஸ்’ எனும் மேன்யூ, லிவர்பூல், சிங்கப்பூர் குழுக்களின் முன்னாள் ஆட்டக்காரர்களுக்கிடையிலான மூன்று காற்பந்து ஆட்டங்கள் இன்றிரவு ஏழு மணியிலிருந்து சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறுகின்றன.   

இந்த ஆட்டங்களில் பங்கேற்பதற்காக சிங்கப்பூருக்கு வருகை தந்திருக்கும் திரு பெக்கம், தேக்கா உணவங்காடியில் தனது நண்பருடன் சேர்ந்து ஆப்பம், தோசை உள்ளிட்ட உணவுகளை ருசித்துக்கொண்டிருந்த காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சுற்றுப்புறத்தைப் பார்வையிட்டபடி, தமது நண்பருடன் உரையாடிக்கொண்டே சிங்கப்பூரின் பிரபலமான உணவுவகைகளை அவர் சாப்பிட்டார்.

அவரைத் தொந்தரவு செய்யாமல், ரசிகர்கள் பலரும் புகைப்படங்கள், காணொளி எடுத்துச் சென்றனர். 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity