மருத்துவமனை உடையில் பிஎம்டியை சைனாடவுன் சாலையில் ஓட்டிச் சென்ற எஸ்ஜிஎச் நோயாளி

சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலிருந்து நோயாளி ஒருவர் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றை சைனாடவுனின் பேருந்துத் தடத்தில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) ஓட்டிச் சென்றார். அந்த நோயாளி மருத்துவமனை உடுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயூ டோங் சென் ஸ்திரீட்டில் நிகந்த இந்த வழக்கத்துக்கு மாறான நிகழ்வைக் காட்டும் 11 வினாடி காணொளி சமூக ஊடகங்களில் வலம்வருகிறது.

மருத்துவமனையின் ஊழியர்கள் யாரிடமும் சொல்லாமல் நோயாளி ஒருவர் தனது தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் மருத்துவமனையை விட்டுச் சென்றதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் தங்களைப் பார்க்க வருபவர்களுடன் சிறிது நேரம் செலவிட விரும்பினால் அதனைத் தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என தலைமைத் தாதியான டாக்டர் டிரேசி கரோல் ஐரி கூறினார். அவ்வாறு செல்வது நோயாளிக்குப் பாதுகாப்பானதாக இருக்குமா என்பதைப் பரிசோதித்து பின்னர் அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.

அவர்கள் மருத்துவமனையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து வெகுநேரம் வெளியில் இருந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அழைத்து அவர்களைப் பற்றிய தகவல்களை மருத்துவமனை கேட்கும் என்றார் டாக்டர் டிரேசி.

இந்தக் காணொளியை 51 வயதான ஹமீட் ஒஸ்மான் என்பவர் ‘ஸ்டோம்ப்’ இணையப்பக்கத்துக்கு அனுப்பி வைத்தார்.

மின்னிலிக்க தகவல்களை உருவாக்கும் துறையில் இருக்கும் திரு ஹமீட், பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தபோது நோயாளி ஒருவர் சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து திரும்ப முயற்சி செய்வதைக் கண்டார்.

தனிநபர் நடமாட்டச் சாதனங்களை சாலையில் ஓட்ட அனுமதி இல்லை. நடைபாதைகளில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் அவற்றைச் செலுத்தலாம்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு அதே ஸ்கூட்டரில் அந்த நோயாளி மருத்துவமனைக்குத் திரும்பியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity