சாங்கி விமான நிலையம்: குடிநுழைவுக்கு கடவுச்சீட்டு தேவையில்லை; கருவிழி, முக அடையாள சோதனை

கருவிழி, முகம் ஆகியவற்றைக் கொண்டு அடையாளம் காணும் தொழில்நுட்பம் சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் பரிசோதித்துப் பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. 

இதில் பயணிகள் தங்களது குடிநுழைவு நடைமுறைகளை நிறைவு செய்ய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தத் தேவையிருக்காது.

அண்மையில் துவாஸ் சோதனைச் சாவடியில் இதுபோன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்தப் புதிய குடிநுழைவு நடைமுறை தற்போதிருக்கும் கடவுச்சீட்டு, பெருவிரல் ரேகைப் பயன்பாட்டு முறையைவிட வேகமானதாக இருக்கும்.

கைகளில் வறட்சி, காயங்கள் போன்றவை ஏற்படும்போது பெருவிரல் ரேகை மூலம் அடையாளம் காணப்படுவது சிக்கலாகிவிடுகிறது.

சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி இந்தப் பரிசோதனை தொடங்கியது. ஆறு வயதுக்கு மேற்பட்ட, K என்ற எழுத்தில் தொடங்கும் கடவுச்சீட்டு எண் கொண்ட சிங்கப்பூரர்கள் மட்டுமே இந்தப் புதிய நடைமுறையைப் பயன்படுத்த தற்போது வகைசெய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களது கடவுச்சீட்டு 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு அளிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.

சுமார் ஆறு மாத காலத்துக்கு இந்தப் பரிசோதனைகள் தலா ஒரு தடத்தில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய நடைமுறையைப் பயன்படுத்துவோர் கறுப்புக் கண்ணாடிகள், தொப்பிகள் போன்ற கண், முகம் ஆகியவற்றை மறைக்கக்கூடியவற்றை அணிந்திருந்தால் அவற்றை அகற்ற வேண்டும்.

இந்தப் புதிய முறையின் இரண்டு விதமான செயல்பாடுகள் அவற்றின் திறன், துல்லியம் போன்றவற்றுக்காகப் பரிசோதிக்கப்படுகின்றன.

முதல் வகையில், முதல் பயணியின் அடையாளங்கள் முழுமையாகச் சோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அடுத்த பயணியின் அடையாளங்களின் பரிசோதனை தொடங்கும்.

அதாவது, ஒரு கதவு திறந்து பயணி நுழைந்து, அடுத்த கதவை நோக்கி நடந்து செல்லும்போதே அவரது கண், முக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டாவது கதவு தானாகவே திறந்துகொள்ளும். இரண்டாவது கதவு திறப்பதற்காக பயணி காத்திருக்கத் தேவையிருக்காது.

இரண்டாவது வகையில், முதல் பயணியின் அடையாளங்கள் முழுமையாகச் சோதிக்கப்பட்டு அவர் வெளியேறிய பிறகே அடுத்த பயணியின் அடையாளங்காணும் பணி தொடங்கும்.

அதாவது, முதல் கதவு திறந்து ஒருவர் நுழைந்ததும் அந்தக் கதவு மூடிக்கொள்ளும். அவர் இரண்டாவது கதவுக்கு அருகில் சென்று நின்ற பிறகே அவரது  அடையாளங்கள் பரிசோதிக்கப்படும். சரியாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது கதவு திறந்து அவர் வெளியேற அனுமதி அளிக்கப்படும். அதன் பின்னரே அடுத்த நபர் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுவார்.

துவாஸ் சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 22,500 சிங்கப்பூரர்கள் குடிநுழைவு நடைமுறைகளை இந்தப் புதிய முறையில் நிறைவு செய்தனர். 90% நடைமுறைகள் சுமுகமாக நடைபெற்றன.

நான்காவது முனையத்தில் உள்துறைக் குழுவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகவை உருவாக்கிய, பயணிகளுக்கு எளிதாகப் புரியக்கூடிய இடைமுகப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity