உதித்தெழுந்த கலைஞனுக்கு சரவெடி பொங்கல்

இர்ஷாத் முஹம்மது

சட்டத்துறையில் ஏழாண்டுகளைக் கழித்த பிரபல உள்ளூர்த் தொலைக் காட்சி நட்சத்திரம் ச.வடிவழகன், தமக்குள்ளே உதித்த கேள்விக்குப் பதில் தேட மீண்டும் கலையுலகில் முழுமையாக தம்மை ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளார். 

“என்னுள் இருந்த கலைஞனுக்கு நான் தீனிபோடவில்லை என்ற குற்ற உணர்வு என்னை அவ்வப்போது தட்டிச் சென்றது. அந்தக் கலைஞனை என்னால் கொல்ல முடியவில்லை,” என்ற வடி ‘சிங்கா ஏர்லைன்ஸ்’ நாடகத்திலிருந்து முழுமூச்சாகத் தமது கலைப் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.

வடி, ‘வடி, ரெடி, வெடி’ என்ற புத்தாக்கமான கலந்துரையாடல் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வழிநடத்துகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உதித்தெழுந்த கலைஞனுக்கு இது சிறப்பான பொங்கல்.

“எனக்குள் தேடல் இருந்துகொண்டே இருக்கிறது. அது ஒரு நல்ல விஷயம்தான். எப்போதுமே தேடல் இருந்துகொண்டுதான் இருக்கவேண்டும். தேடல் இல்லை என்றால் வாழ்க்கை முடிந்தது மாதிரி,” என்று தமக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் கூறினார் 49 வயது வடி. 

இந்தத் தேடலில் தமது மனைவி விக்னேஸ்வரியின் ஆதரவு அவருக்கு மேலும் வலுவான ஊக்கத்தைத் தந்துவருவதாக அவர் பகிர்ந்தார்.

“அமைதியாக ஆதரவு தரும் குணமுடையவர் என் மனைவி. நான் பெரிய அளவில் எந்த விஷயத்தையும் செய்யமாட்டேன் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். பொருளாதார ரீதியில் திடமாக இருப்பதும் ஒரு காரணம். எனது தேடலுக்கு முட்டுக்கட்டையாக அவர் இருந்ததே இல்லை,” என்று அவர் மெச்சினார்.

பல்லாண்டுகளுக்குப் பின்னர் கலைத்துறையில் முழு கவனம் செலுத்திவரும் வடி, சிறிது காலத்திற்குப் பின்னர் மீண்டும் சட்டத் துறைக்குச் சென்றுவிடுவார். 

இக்காலத்தில் தமக்குள் இருந்த வேட்கையை தன்வசப்படுத்தி புத்தாக்கமான முயற்சிகளில் ஈடுபட திட்டம் வைத்துள்ளார். 

“புத்தாக்கமான சிந்தனைக்கு மனம் அமைதியாக இருக்க வேண்டும். பரந்த பார்வையுடன் புதுவித சிந்தனைக்குத் தளம் வகுக்க வேண்டும்,” என்றார் வடி. 

காலத்தின் மாற்றமும் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியும் கலைத் துறையில் பரிணாம மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது என்று அவர் நம்புகிறார். 

“மக்கள் இப்போது தொலைக்காட்சியை மட்டும் பார்ப்பதில்லை. தங்கள் கைக்குள்ளேயே திறன்பேசி மூலம் ‘யுடியூப்’ தளத்தில் காணொளிகளைக் கண்டு தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். சமூக ஊடகங்களைக் கொண்டு பகிரவும் செய்கின்றனர்.

“அவ்வாறு எளிதில் பகிரக்கூடிய தன்மை சமூக ஊடகங்களுக்கு இருப்பதால் சிங்கப்பூரில் மட்டுமல்ல மலேசியாவிலும் முந்தைய நாடகங்களும் நிகழ்ச்சிகளும் இன்றும் காணப்பட்டு வருகின்றன.

“நான் சட்டம் பயில செல்லும்போது இன்ஸ்டகிராம் இல்லை. ‘யுடியூப்’ அப்போதுதான் வளர்ந்துவந்த நேரம். இன்று அதீத வளர்ச்சி அடைந்து அதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

“முன்பு இருந்ததைவிட தற்போது உள்ளூர் தொலைக்காட்சியில் தரமான தொடர் நாடகங்கள் வெளிவருகின்றன. உலகத் தரம் வாய்ந்த, தமிழ் நன்றாகப் பேசக்கூடிய நடிகர்களும் உள்ளனர். 

“மக்களின் ரசனையும் மாறியுள்ளது. அது கால மாற்றத்தின் யதார்த்தம். ஆக, புதிய வாய்ப்புகள் இருக்கும் அதே நேரம் புதிய சவால்களும் உள்ளன,” என்று கருத்துரைத்தார் வடி.

இருப்பினும், தமது முந்தைய கதாபாத்திரங்களைக் கொண்டு தன்னை இன்னும் அடையாளப்படுத்துகிறார்கள் என்றும் ‘காண்போம் கற்போம்’, ‘அமளி துமளி’ ‘பிளேனட் கலாட்டா’, ‘தூள்’ போன்ற நிகழ்ச்சிகள் இன்னும் மக்கள் மனதில் பதிந்துள்ளதால் அந்தக் காணொளிகள் இன்றுவரை பகிரப்பட்டு, பேசப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். 

“குறிப்பாக இன்றைய இளையர்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது அவர்கள் அதிகம் நான் படைத்த நிகழ்ச்சிகளை, நடித்த நாடகங்களைப் பார்த்து வளர்ந்துள்ளனர். அவர்களின் மனதிலும் நினைவிலும் அந்த நிகழ்ச்சிகள் ஆழமாகப் பதிந்துள்ளதாகப் பலர் என்னிடம் கூறியுள்ளனர்,” என்றார் வடி.

“என்னைச் சந்திக்கும் பலரும் என்னை மீண்டும் கலைத்துறைக்கு வருமாறு கூறிவருகின்றனர்,” என்று தெரிவித்தார் வடி.

மேலும் பல முத்தாய்ப்பான உள்ளூர் நிகழ்ச்சிகளை உருவாக்கவேண்டும் என்று கூறிய அவர், தமிழ் வாழும் மொழியாக இருக்க தமிழ்க் கலைகள் முக்கியம் என்று கருதுகிறார்.  

நகைச்சுவை வழியாகவே தாம் தமது கருத்துகளை மக்களுக்குக் கொண்டுபோக விரும்புகிறார். மேலும் பேச்சு வழக்கில் பேசி எப்படி கருத்துகளைக் கொண்டு போகமுடியுமோ அந்த வழியை ஆராய்ந்து அவ்வாறு செய்ய முற்படுகிறார். 

“சிங்கப்பூரிலேயே உருவான தனித்துவமிக்க ‘அஞ்சடி பாஷை’ பேசுவோர் நமது தமிழ் சமூகத்தில் உள்ளனர் என்பதை நாம் மறக்கவோ மறைக்கவோ முடியாது. அதற்கு அவர்கள் கேட்கும் வகையில் அவர்களின் பேச்சு வாக்கில் பேசி கருத்துகளைக் கொண்டுசேர்க்கவேண்டும். 

“ஆக, தமிழ் வளர்க்க தூய தமிழில் பேச வேண்டும் என்பதில்லை. பேச்சு வழக்கில் பேசி தமிழனைத் தூக்கிவிடவேண்டும். அப்போது தமிழனும் வாழ்வான், தமிழும் வாழும்,” என்றார் அவர்.

“முழுமையாக இல்லாமல் கொஞ்சம் தமிழ் பேசுவோரை தொடர்ந்து நம் தாய்மொழியைப் பேச ஊக்குவிக்கவேண்டும். அதற்காகத்தான் சில நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் கலந்து பேசுகிறோம். இதற்காகவே சிந்தித்து சில கதாபாத்திரங்களையும் உருவாக்குகிறோம்,” என்றார். 

மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள வடி, வித்தியாசமான, சந்தோஷமான நகைச்சுவையுடன் கூடிய கலந்துரையாடல் நிகழ்ச்சியைச் செய்வதில் பெருமைகொள்கிறார். 

அண்மையில் தொலைக்காட்சியில் வெளிவந்துகொண்டிருக்கும் ரோமியோ அண்ட் ஜூலியட் எனும் நாடகத்திலும் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார். 

தமது இளமைக் காலம் முதலே கலைத் துறையில் ஈடுபட்டுவரும் வடி, ரவீந்திரன் நாடகக் குழுவின்  நிறுவனர்களில் ஒருவர். பல்லாண்டு களுக்குப் பின்னர் 2004ஆம் ஆண்டில் இளம் தலைமுறையினருக்கு அவரும் அவரது குழுவினரும் வழிவிட்டனர்.

தற்போது பல நாடகக் குழுக்கள் சிங்கப்பூர் தமிழ்க் கலையுலகில் இருக்கும்பட்சத்தில் புதிய குழுவைத் தொடங்குவது தமது எண்ணம் இல்லை என்றார் வடி. 

பல குழுவினரும் தம்மை அணுகி ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் சேவையாற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்பட்சத்தில் அதில் ஈடுபடவும் வடிவழகன் திட்டமிட்டுள்ளார்.

irshathm@sph.com.sg