மேலும் இருவர் கிருமித் தொற்றால் பாதிப்பு

சிங்கப்பூரில் வூஹான் கிருமித் தொற்றுக்கு மேலும் இருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.

ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்ட ஐந்து சம்பவங்களைப் போலவே பாதிக்கப்பட்டுள்ள இவ்விருவருமே சீனாவின் ஹுபெய் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 

அவர்களில் ஒருவர் 56 வயது சீன ஆடவர். இம்மாதம் 19ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்திருந்த அவருக்கு இம்மாதம் 25ஆம் தேதி இருமல் ஏற்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு முன்னர் அவர் பாசிர் ரிஸ் குரோவ் பகுதியில் தமது குடும்ப உறுப்பினர்களுடன் தங்கியிருந்தார்.

இரண்டாவது நபர், வூஹான் நகரைச் சேர்ந்த 35 வயது சீன ஆடவர். இம்மாதம் 23ஆம் தேதி  சிங்கப்பூருக்கு வந்த அவர், மரினா பே சேண்ட்சிஸ் தங்கியிருந்தார்.  இம்மாதம் 24ஆம் தேதி இந்நோய்க்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டதை அடுத்து அந்த ஆடவர் ராஃபிள்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய தொற்றுநோய் நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேருக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஹுபெய் மாநிலத்தைச் சேர்ந்த சீனர்களிடையே சிங்கப்பூரில் கிருமித்தொற்று அதிகரித்திருப்பதாகவும் உலகளவில் ஏற்படும் கிருமித் தொற்றுடன் இது ஒத்துப்போகும் விதமாக அமைவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

இங்குள்ள மக்களிடையே கிருமித் தொற்றுக்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை என்றாலும் அதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிகிறது. புதிய சம்பவங்கள் குறித்து நேற்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்த சுகாதார அமைச்சு, புதிய பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளின்படி, ஹுபெயில் கடப்பிதழ் பெற்ற சீனப் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழையவோ இடைவழிப் பயணம் செய்யவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அண்மையில், ஹுபெயிலிருந்து சிங்கப்பூருக்கு கிட்டத்தட்ட 2,000 பயணிகள் வந்தனர். இவர்களில் அதிக அபாயத்தை விளைவிப்பதாக அடையாளப்படுத்தப்படுவோர் தனிமைப்படுத்தப்படுவர்.

பாதிக்கப்படுவோரைத் தனிமைப்படுத்தும் உத்தரவுகளை மீறுவோருக்கு சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம்.

அண்மையில் ஹுபெயிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பயணிகள்,  ஹுபெய்க்கு ஏற்கெனவே சென்று வந்த அல்லது ஹுபெயில் சீனக் கடப்பிதழ்களைப் பெற்ற சிங்கப்பூர் வாசிகள் அல்லது இங்கு நீண்ட கால அனுமதி அட்டையைக் கொண்டுள்ளவர்கள், ஹுபெய்க்கு ஏற்கெனவே சென்றுள்ள அல்லது அங்கு சீனக் கடப்பிதழ்களைப் பெற்ற புதிய வருகையாளர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கு இந்தப் புதிய கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று  தேசிய வளர்ச்சி அமைச்சரும் அமைச்சர்கள்நிலை  பணிக்குழுவின் இணைத் தலைவருமான லாரன்ஸ் வோங் தெரிவித்தார். 

ஹுபெய் தலைநகர் வூஹான், இந்நோய்ப்பரவலின் மையப்பகுதியாக உள்ளது. ஹுபெயிலிருந்து அண்மையில் சிங்கப்பூருக்கு வந்தோரையும் ஹுபெய் கடப்பிதழ்களைக் கொண்ட சீன நாட்டவர்களையும்  தொடர்புகொள்ள சுகாதார அமைச்சு தொடங்கிவிட்டது. 

இத்தகையோர் சுமார் 2,000 பேர் சிங்கப்பூரில் உள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 1,000 பேர் குறுகியகால  வருகையாளர் அட்டைகளை வைத்திருப்பவர்கள். கிட்டத்தட்ட பாதி பேர் வருகையாளர்களாகவும் எஞ்சியோர் சிங்கப்பூர் வாசிகளாகவும் உள்ளனர்.

அத்துடன், இரண்டாவது பிரிவினராக  ஹுபெய்க்கு ஏற்கெனவே சென்று வந்த அல்லது ஹுபெயில் சீனக் கடப்பிதழ்களைப் பெற்ற சிங்கப்பூர் வாசிகள் அல்லது இங்கு நீண்டகால அனுமதி அட்டையைக் கொண்டுள்ளவர்கள் சிங்கப்பூரில் தரையிறங்கியவுடன் தனிமைப்படுத்தப்படுவர்.

மேலும், இன்று நண்பகல் முதல், கடந்த 14 நாட்களில் ஹுபெய்க்குச் சென்றிருந்த புதிய பயணிகள் அல்லது ஹுபெயில் சீனக் கடப்பிதழ்களைப் பெற்றவர்கள் சிங்கப்பூருக்குள் நுழையவோ இடைவழிப் பயணம் செய்யவோ  அனுமதிக்கப்படமாட்டார்கள்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon