இக்கட்டான நிலைமையை சாதகமாக்க ஹெங் அழைப்பு

கொவிட்-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் வர்த்தகம் சரிந்துள்ள நிலையில் இந்தச் சந்தர்ப்பத்தை நிறுவனங்கள் முழுமையாக பயன்

படுத்திக்கொண்டு உருமாற வேண்டும் என்று வலியுறுத்தினார் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட். கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான சிறப்பு ஆதரவுத் திட்டத்தை மட்டுமல்லாது மற்ற அரசாங்க ஆதரவுத் திட்டங்களையும் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கிருமித்தொற்று நிவாரணத் திட்டங்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன என்றாலும் நிலைமை எப்படி மாறுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு அரசு கூடுதல் உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிச்சனர் ரோட்டில் அமைந்துள்ள பார்க் ராயல் ஹோட்டலில் செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசிய திரு ஹெங், அண்மையில் வெளிவந்த வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்ற திட்டங்கள் பற்றி விவரித்தார்.

கொரோனா கிருமித்தொற்றை எதிர்த்து போராடும் நிலைத்தன்மை, ஆதரவுத் தொகுப்புத் திட்டம் உட்பட பொருளியில் உருமாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் திட்டங்களை நிறுவனங்கள் பயன் படுத்தலாம் என்றார் திரு ஹெங்.

“சிறிய மற்றும் நீண்டகால சவால்கள் நமக்கு உள்ளன. இப்போதுள்ள வர்த்தகச் சரிவு நேரத்தைப் பயன்படுத்தி திறன்கள், ஆற்றல்கள், செயல்முறைகளின் தரத்தை உயர்த்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் சரியான நேரத்தில் வலிமையோடு நாம் மீண்டு வரலாம்,” என்றார் துணைப் பிரதமர் ஹெங்.

தற்போதைய கொரோனா கிருமித்தொற்று நிலவரத்தை அடிப்

படையாக வைத்து அரசாங்கம் திட்டங்களை உருவாக்கியுள்ளது என்றும் எவ்விதத்தில் கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை இப்போது கணிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டார் திரு ஹெங்.

“திட்டங்களும் வளங்களும் நமக்கு உள்ளன. சூழ்நிலைக்கு தகுந்தவாறு மேலும் பல முயற்சிகள் எடுக்க நாம் தயாராக உள்ளோம்,” என்றார் அவர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி அதன் சேவைகளையும் வேலைகளையும் ஆக்ககரமாக உருமாற்றி வரும் பார்க் ராயல்      ஹோட்டலைப் பாராட்டிய நிதி அமைச்சர் ஹெங், கிருமித்தொற்றால் வர்த்தகம் சரிந்துள்ள இந்த காலத்தில் பார்க் ராயல் ஹோட்டல் அதன் உருமாற்றத்தை முடுக்கியுள்ளதையும் குறிப்பிட்டார்.

இணையப் பதிவு படிவம், உற்பத்தித்திறனை அதிகரிக்கும் படுக்கைகள், ஊழியர்களுக்கு தங்கு விடுதிகளின் வெவ்வேறு பிரிவுகளில் மறுபயிற்சிகள் போன்ற பல வழிமுறைகளின் மூலம் பார்க் ராயல் தங்குவிடுதி அதன் உற்பத்தித் திறனை அதிகரித்து வருகிறது.

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டல், இந்திய சுற்றுப்பயணிகள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுபயணிகளையும் அதிக அளவில் உபசரிக்கிறது.  சிங்கப்பூரிலுள்ள எல்லா தங்குவிடுதிகளையும் போன்று பார்க் ராயல் ஹோட்டலிலும் வர்த்தகம் குறைந்துள்ளது என்றும் வரவு செலவுத் திட்டத்தில் வருமான ஆதரவுக்கான திட்டங்கள் முக்கியமாக உதவிபுரிகின்றன என்றும் கூறினார் பார்க் ராயல் பொது மேலாளர் திரு ரிச்சர்ட் ஓங்.