நிபுணர்கள் எச்சரிக்கை: இந்தியாவில் கிருமித்தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருக்கலாம்

கிருமித்தொற்று ஊடுருவலைத் தடுக்கும் முயற்சியாக வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு மருத்துவப் பரிசோதனைகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.

ஆனாலும், மக்கள்தொகைப் பெருக்கம் அதிகம் உள்ள தெற்கு ஆசியாவில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவது சிரமம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அந்த நாடுகளில் போதிய அளவுக்கு மருத்துவக் கட்டமைப்புகள் இல்லாததையும் அவர்கள் காரணம் காட்டியுள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளில் சுமார் 1.7 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர். உலக மக்கள்தொகையில் அது ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகம்.

தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா கிருமித்தொற்று நோயாளிகளுக்கு, அங்குள்ள மருத்துவ வசதிகளைக் கொண்டு, தேவையான சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படக்கூடும் என்பது நிபுணர்களின் அச்சம்.

நீரிழிவு போன்ற ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளோருக்கு கொரோனா கிருமித்தொற்று மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும்.

சீனாவில் நடைமுறைப்படுத்தியது போன்ற தடைகாப்பு உத்தரவுகளை தெற்கு ஆசியாவில் பல நாடுகளில் நடைமுறைப்படுத்துவதிலும் சிரமம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவுக்கும் அது பொருந்தும் என்று புதுடெல்லியில் உள்ள ஜார்ஜ் பொதுச் சுகாதாரப் பள்ளியின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் விவேகானந் ஜா கூறியுள்ளார்.

வெளியான புள்ளிவிவரங்களின்படி, இதுவரை இந்தியாவில் 29 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அங்கு உண்மையில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைவிட மிக அதிகமாக இருக்கக்கூடும் என்ற அச்சமும் நிபுணர்களிடையே நிலவுகிறது.

இந்தியாவின் கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் கிருமிப்பரவல் சாத்தியங்களும் மிகுந்த அக்கறைக்குரியவை என்று அமெரிக்கா கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

ஆனால், இது வரை 1 மில்லியன் பயணிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தி இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பரிசோதனைத் திறன்களை அதிகப்படுத்தியிருப்பதாகவும் அனைத்துலக விமான நிலையங்கள் இருக்கும் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அது தெரிவித்தது.

சுமார் 1.3 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் பலர் தினமும் நெரிசல் மிகுந்த பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலானதாகவே இருக்கும்.

ஆனால், கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று உறுதிபடக் கூறியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. வட இந்தியாவின் முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றான ‘ஹோலி’ பண்டிகையில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“கொரோனா கிருமி ஒரு சவால்தான்; ஆனால், அதன் பரவலைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது,” என்று ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். மருந்துப் பொருட்கள் துறை இவரது மேற்பார்வையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஐவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது பல்கிப் பெருகினால் அதனைக் கையாளுவதற்கான மனித வளம், தேவையான மருத்துவப் பொருட்கள் போன்றவை இல்லை என்றும் பெரும் அவசரகால நிலையை எதிர்கொள்வதற்கான திறன் இல்லை என்றும் பாகிஸ்தான் மருத்துவச் சங்கத்தின் தலைமைச் செயலாளார் ஷாஹிட் மாலிக் ராய்ட்டர்சிடம் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் சுமார் 300,000 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பங்ளாதேஷ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால், பரிசோதனைக்கு உட்படாமல் பங்ளாதேஷ் நாட்டுக்குள் செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்ட, சிங்கப்பூரில் பணிபுரியும் பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர், “கிருமி தொற்றிய ஒரு சிலர் அவ்வாறு பரிசோதனைக்கு உட்படாமல் ஊருக்குள் சென்றுவிட்டால் அது பேரிடரை ஏற்படுத்திவிடும்,” என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!