பிரதமர் லீ: அத்தியாவசியச் சேவைகள், முக்கிய பொருளியல் பிரிவுகள் தவிர மற்றவை மூடல்

சிங்கப்பூரில் பெரும்பாலான வேலையிடங்கள் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) முதல் மூடப்படும்; அனைத்துப் பள்ளிகளும் வீட்டிலிருந்து கல்வி கற்கும் முறையை ஏப்ரல் 8 முதல் நடைமுறைப்படுத்தும் என்று இங்கு கிருமிப் பரவல் அதிகரிப்பதைத் தவிர்க்கும் நோக்கிலான நடவடிக்கைகளை இன்று (ஏப்ரல் 3) பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.

உணவு நிறுவனங்கள், சந்தைகள், பேரங்காடிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், பயனீட்டுச் சேவைகள், போக்குவரத்து மற்றும் முக்கியமான வங்கிச் சேவைகள் போன்ற அத்தியாவசியச் சேவைகள் மற்றும் முக்கியமான பொருளியல் பிரிவுகள் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து வேலையிடங்களும் மூடப்படும் என்று இன்று மாலை பிரதமர் லீ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

அனைத்து பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிலையங்கள் வரும் புதன்கிழமையிலிருந்து பள்ளிகளை மூடிவிட்டு வீட்டிலிருந்தே கல்விபயிலும் நடைமுறையைச் செயல்படுத்தும்.

பாலர் பள்ளிகள், மாணவர் பராமரிப்புச் சேவைகள் மூடப்படும். ஆனால், “வேலையைத் தொடரவேண்டிய நிலையில் இருக்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு மட்டும் இந்தச் சேவைகள் எல்லைக்குட்பட்டு வழங்கப்படும்,” என்றும் பிரதமர் கூறினார்.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த சிறந்த முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டபோதும், கடந்த இரண்டு வாரங்களாக நாளுக்கு 50 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாவதைச் சுட்டிய பிரதமர், இந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கான விளக்கத்தை அளித்தார்.

“தொடக்கத்தில் பல புதிய சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு ஏற்பட்டதாக இருந்தது; அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள். ஆனால், கடந்த வாரத்தில் உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்தன. கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பதில் சிறப்பாகச் செயல்பட்டபோதும், இவற்றில் சுமார் பாதி சம்பவங்கள் யாரிடமிருந்து எங்கே கிருமி தொற்றியது என்பதைக் கண்டறிய முடியவில்லை,” என்றார் பிரதமர்.

“கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதை இது காட்டுகிறது. அவர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே மற்றவர்களுக்கு கிருமியைப் பரப்பக்கூடும்,” என்றார் அவர்.

நிலைமை கட்டுக்குள் இருக்கும்போதே, “கிருமித்தொற்று அதிகரிப்பதைத் தவிர்க்க தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க,” அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

“போகிற போக்கை கவனித்தால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காவிடில், படிப்படியாக நிலைமை மோசமடையும் என கவலைப்படுகிறேன்; அல்லது மற்றொரு பெரிய கிருமித்தொற்று குழுமம் பிரச்சினையை மோசமாக்கக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிருமிப் பரவலைக் கையாளும் அமைச்சுகள் நிலை பணிக்குழுவுடன் விவாதித்த பிறகு, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்றார் பிரதமர்.

இதன் மூலம் கிருமித்தொற்று பரவல் குறையும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த பிரதமர், அதன் பிறகு சில நடைமுறைகளைத் தளர்த்தலாம் என்றார். ‘கிருமித்தொற்று பரவல் சங்கிலியை அறுக்கும் (circuit breaker)’ இந்த நடைமுறை முதலில் ஒரு மாதத்துக்கு நடப்பில் இருக்கும் என்றார் அவர்.

மூன்று முக்கியமன விஷயங்களை அவர் குறிப்பிட்டார்.

“முதலாவது, இயன்றவரை வீட்டிலேயே இருங்கள். இரண்டாவது, உங்கள் வீட்டில் இருப்போர் தவிர மற்றவர்களை நேரடியாக சந்தித்து உறவாடுவதைத் தவிருங்கள்,” என்றாவது பிரதமர்.

உணவுப் பொருட்கள் வாங்க சந்தை, உணவகங்கள், உணவங்காடிகள் ஆகியவற்றுக்கும் உடற்பயிற்சிக்காக அருகிலிருக்கும் பூங்காக்கள் போன்றவற்றுக்கும் செல்வது உட்பட அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வெளியில் செல்லுங்கள். அப்போதும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்றார் பிரதமர்.

ஒவ்வொருவருக்குமிடையேயான நேரடி தொடர்பைக் குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

உயர்த்தப்பட்ட பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் நான்கு வாரங்களுக்கு, அதாவது இம்மாதம் 7ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

இந்த நடவடிக்கைகளை உடனடியாக நடப்புக்கு கொண்டுவரும் அமைப்புகள் அவ்வாறு செய்திட வலுவாக ஊக்குவிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, தற்போது நடப்பில் இருக்கும் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றது.

பொது நீச்சல் குளங்கள், மன்றங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இடங்களும் இந்தக் காலகட்டத்தில் மூடப்படும்.

சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இடங்கள், பூங்காக்கள், சூதாட்டக்கூடங்கள், அருங்காட்சியகம் போன்றவையும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மூடப்படும்.

விளையாட்டு நிகழ்வுகள், சமயம் சார்ந்த சேவைகள் ஆகியனவும் தற்காலிகமாக நிறுத்தப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

முகக்கவசங்கள் அணிந்துகொள்ள விரும்புபவர்களை அரசாங்கம் இனி தடுக்காது என்று குறிப்பிட்ட பிரதமர், வீடுகளுக்கு மறுபடியும் பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் வழங்கப்படும் என்றார்.

புதிய நடவடிக்கைகளின் தொடர்பில் பிரதமரின் உரை, அமைச்சுகள் நிலை அறிவிப்புகள் தொடர்பான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஏப்ரல் 4) அச்சுப் பிரதியை நாடுங்கள்! நீங்கள் சந்தாதாரரானால், நாளிதழ் உங்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!