நோன்பு துறப்பதற்காக தினமும் 20,000 பேருக்கு இலவச உணவு

சிங்கப்பூரில் புனித ரமலான் மாதத்தில் நோன்பு துறப்பதற்காக தினமும் 20,000 பேருக்கு உணவு வழங்க முனைந்துள்ளது #எஸ்ஜியுனைடெட் புக்கா புவாசா திட்டம்.

இத்திட்டம் மூலம் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வசதி குறைந்தோருக்கும் இலவச உணவு வழங்கப்படும்.

கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடும் முதல்நிலை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களோடு ஒருமைப்பாடு காட்டவும் நன்றி கூறும் நோக்கத்திலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“மற்றவர்களின் நோன்பு துறப்புக்கு நன்கொடை வழங்குவது முஸ்லிம்களிடையே பாராட்டுக்குரிய ஒரு செயலாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ரமலான் மாதமும் நமது பள்ளிவாசல்களில் சமூக நோன்பு துறப்பை ஏற்பாடு செய்ய நன்கொடை அதிகம் வழங்கப்படும்,” என்றார் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) தலைமை நிர்வாகியான திரு ஈசா மசூத்.

இவ்வாண்டு ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன என்றும் நெருக்கடிநிலையில் அவதியுறுவோருக்கு உதவும் இந்த அர்த்தமுள்ள திட்டத்தில் ஈடுபடுவதாகவும் கூறினார் திரு ஈசா.

‘#எஸ்ஜியுனைடெட் புக்கா புவாசா’ திட்டம் உள்ளூர் தொழில்களுக்கும் சுகாதார பராமரிப்பு ஊழியர்களுக்கும் ஆதரவு வழங்க $3 மில்லியன் நன்கொடை திரட்டும் நோக்கமும் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் உணவு தயாரிப்பாளர்களுக்கும் விநியோகிப்பாளர்களுக்கும் இந்தப் பணம் வழங்கப்படும். இந்தத் தொகை சிங்கப்பூர் மலாய் வர்த்தக, தொழிற் சபையால் (எஸ்எம்சிசிஐ) பட்டுவாடா செய்யப்படும்.

“உணவு, பானத் துறையில் எதிர்பாராத சவால்களை எதிர்நோக்கும் பங்காளிகளுடன் இணைந்து எஸ்எம்சிசிஐ ஈடுபடுவது இந்தத் திட்டத்திற்கு மேலும் அர்த்தம் சேர்க்கிறது,” என்றார் ‘எஸ்எம்சிசிஐ’யின் நிர்வாக இயக்குநர் திரு அஸ்ருல் நிஸாம் ‌‌‌ஷா சொஹைமி.

இந்தத் திட்டத்திற்கு முயிஸ் $1 மில்லியன் நன்கொடையை வழங்கியுள்ளது. ‘ரஹ்மதன் லில் ஆலமீன்’ அறநிறுவனம் (ஆர்எல்எஃப்) என்ற அமைப்பு ‘கிவிங்.எஸ்ஜி’ என்ற இணைய நன்கொடை தளத்தில் தேவைப்படும் பணத்தைத் திரட்ட முயற்சி செய்து வருகிறது.

இந்த நன்கொடை திரட்டு கடந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 23ஆம் தேதி வரை நீடிக்கும். இதுவரை $607,000க்கும் மேலான தொகை இந்தத் தளம் மூலம் திரட்டப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 500 தொண்டூழியர்கள் ஈடுபடும் இந்த திட்டத்தை முயிஸ், பள்ளிவாசல்கள், ஆர்எல்எஃப், மக்கள் கழகம், ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ குழு, எஸ்எம்சிசிஐ ஆகிய அமைப்புகள் ஒன்று இணைந்து நடத்தி வருகின்றன.

தினசரி உணவு வேளைகளுக்கு பதிவு செய்ய விரும்புவோர் இத்திட்டத்தின் இணையத்தளத்தில் அதைச் செய்யலாம். இந்த உணவு 20 சமூக மன்றங்களுக்கும் 10க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும்.
அத்துடன் முயிஸ் அமைப்பின் சாக்காட் நிதி ஆதரவு திட்டத்தின் மூலம் பயனடையும் இல்லங்களுக்கும் இந்த உணவு வழங்கப்படும்.

இத்திட்டத்தைப் பற்றி பிரதமர் லீ சியன் லூங், அதிபர் ஹலிமா யாக்கோப், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி போன்ற தலைவர்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்திருந்தனர்.

“வேலை இழந்தவர்கள், குறிப்பாக குறைந்த வருமானமுள்ள குடும்பங்கள் உணவின்றி தவிக்கக்கூடும் என்ற கவலை எனக்கும் என் நண்பர்களுக்கும் உதித்தது. அப்போது ஏதாவது திட்டம் மூலம் மக்களுக்குச் சேவையளிக்கவேண்டும் என்று முனைந்தோம்.

“இரண்டே நாட்களில் இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நண்பர்கள், இதர அமைப்புகளின் உதவி பெருமளவு கிட்டியது,” என்றார் ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்பின் தலைவரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு முகம்மது இர்ஷாத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!