துணைப் பிரதமர் ஹெங்: தேர்தல் நெருங்குகிறது

சிங்கப்பூரில் அடுத்த பொதுத் தேர்தல் எவ்வளவு விரைவில் நடக்கிறதோ அந்த அளவுக்கு கொவிட்-19 பிரச்சினைகளைச்  சமாளித்து வேகமாக நாம் மீண்டுவர முடியும் என்று துணைப் பிர தமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூர் பொருளியல், குறிப்பிடத்தக்க நீண்ட கால சவால்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் அந்தச் சவால்களை அடுத்த ஐந்து  முதல்  பத்து ஆண்டுகளில் சமாளித்தாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

“விரைவில் தேர்தல் நடந்து முடிந்தால், ஒவ்வொருவரையும்  ஒன்றுதிரட்டி இந்தச் சவால்களைச் சமாளிக்க நாம் முன்னதாகவே ஆயத்தமாக முடியும்,” என்று துணைப் பிரதமர் தெரிவித்தார். 

“வரும் மாதங்களில் வரும் ஆண்டுகளில் நிலவக்கூடிய மிகவும் நிச்சயமில்லா நிலையைச் சமாளித்து ஆக வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார். 

சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் 2021 ஏப்ரல் 14க்குள் நடக்கவேண்டும். 

இந்த நிலையில் ‘சிஎன்ஏ’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திரு ஹெங் தெரிவித்துள்ள இந்தக் கருத்து, விரைவில் தேர்தல் நடக்கும் என்பதற்கான வலுவான அறிகுறியாகத் தெரிகிறது.

எந்த ஓர் அமைச்சரும் இதுவரை இந்த அளவுக்கு இப்படி தேர்தல் பற்றி திட்டவட்டமாகக் கருத்து கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா கிருமித்தொற்று காரணமாக நடப்புக்கு வந்துள்ள கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாகத் தளர்த்தப்படுகின்றன. 

மூன்றாம் கட்ட தளர்வுக்குப் பிறகுதான் தேர்தல் நடக்குமா என்று கேட்டதற்குப் பதிலளித்த துணைப் பிரதமர், “நீண்டகால பிரச்சினைகளை எந்த அளவுக்கு விரைவாக நாம் கையாளுகிறோமோ அந்த அளவுக்கு சிங்கப்பூரர்கள் வேகமாக சிறந்த முறையில் வலுவாக மீட்சி அடைய முடியும். ஆகையால்தான் கூறுகிறேன், ஒவ்வொரு நாளும் தேர்தல் நெருங்குகிறது. இதற்கு நீங்கள் ஆயத்தமாக வேண்டும்,” என்றார். 

இதர நாடுகள் மிகவும் சிரமமான சூழ்நிலைகளிலும் தேர்தலை நடத்தி இருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 

சிங்கப்பூரில் கொரோனா சூழலில் தேர்தலை நடத்தினால் பொது மக்களின் பாதுகாப்பிலும் சுகாதாரத் திலும் மிக அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும். தேர்தல் நடக்கும் முறைகூட வேறுபட்டு இருக்கும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார். 

நிதி அமைச்சருமான திரு ஹெங், கடந்த செவ்வாய்க்கிழமை $33 பில்லியன் வலிமைக்கான வரவு செலவுத் திட்டம் ஒன்றை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதையும் சேர்த்து இந்த ஆண்டில் மொத்தம் நான்கு பொருளியல் ஆதரவு திட்டங்கள் மன்றத்தில் தாக்கலாகி இருக்கின்றன. நான்காவதாக தாக்கலான திட்டம், கொவிட்-19 நெருக்கடிகளையும் பொருளியல் சவால்களையும் சமாளித்து ஊழியர்களும் நிறுவனங்களும் மீண்டு வர உதவுகிறது. 

நான்கு வரவுசெலவுத் திட்டங்களின் மூலம் பொருளியலுக்கு அரசாங்கம் மொத்தம் $92.9 பில்லியன் தொகையை ஊக்குவிப்பாக ஒதுக்கி இருக்கிறது. 

ஐந்தாவது வரவுசெலவுத் திட்டத்திற்கான தேவை இருக்காது என்று தான் நம்புவதாக திரு ஹெங் கூறினார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online